சிம்பு நற்பணி மன்றத்தில் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி, கலை இலைக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இது குறித்து சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதிப்பும் பேரன்புகொண்ட என் இரத்தத்தின் இரத்தமான, என் உறவுகளே வணக்கம், நீண்ட நாளாக இயற்கையின் செயல்களால், உங்களிடம் நேரடியாக உறவாடாமல், உங்களின் தொலைபேசி வாயிலாக உறவு கொண்டோம். மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி, கலை இலைக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளோம். ஆதலால் நம் நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவர் T.வாசு அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. ஆகையால் மாநில, மாவட்ட, வட்ட, பொறுப்பாளர்கள், நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கலந்து கொள்ள பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். (தேதி பின்னர் அறிவிக்கப்படும்).” என குறிப்பிட்டுள்ளார். 






இந்நிலையில், சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. அரசியல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷினி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.






‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 9ஆம் தேதி  நிறைவடைந்தது. அப்போது, படத்தின் கதாநாயகன் சிம்பு படக்குழுவினர் 300 பேருக்கு வாட்ச் பரிசாக கொடுத்து அசத்தினார். வாட்ச் வழங்கியதற்கு சிம்புவுக்கும், தனது மாநாடு குழுவுக்கும் நன்றி கூறிய இயக்குநர் வெங்கட் பிரபு, விரைவில் அப்துல் காலிக்கை பார்ப்பீர்கள் என்று ட்வீட் செய்தார். இதனைத்தொடர்ந்து, படத்தின் மீதி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், படம் தீபாளிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அஜித்தின் ‘வலிமை’ படமும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதனால், மாநாடு, அண்ணாத்த, வலிமை தீபாவளி ரேஸில் குதிக்க உள்ளது ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.