வெங்கல் ராவ்


சண்டைக்கலைஞராக சினிமாவில் கால்பதித்தவர் வெங்கல் ராவ் (Vengal Rao), சண்டைக்காட்சியின் போது ஒரு விபத்தில் சிக்கினார். 25 ஆண்டுகள் சண்டைக் கலைஞராக இருந்த வெங்கல் ராவ் நகைச்சுவை நடிகராக நடிக்க வடிவேலுவிடம் உதவி கேட்டார். இதனைத் தொடர்ந்து வடிவேலு படங்கள் என்றாலே வெங்கல் ராவை பார்க்கலாம். 


தமிழ், தெலுங்கு படங்களில் பணியாற்றத் தொடங்கிய இவர், வடிவேலுவுடன் இணைந்து காமெடி நடிகராக மிகவும் பிரபலமானார். வடிவேலுவுடன் இணைந்து இவர் நடித்த கந்தசாமி படத்தில் இடம்பெற்ற தேங்காய் காமெடி, தலைநகரம் படத்தில் இடம்பெற்ற சிறையில் நடக்கும் காமெடி, வடிவேலு இவர் தலையில் கையை வைத்து படாதபாடுபடும் காமெடி என்று வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் மிகவும் பிரபலம்.


இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் வெங்கல்ராவ் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். முதலில்  விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆந்திராவை  பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் விஜயவாடாவிலேயே சிகிச்சைப் பெற்று வந்தார் வெங்கல் ராவ். இந்நிலையில் தனது கை கால் செயலிழந்துவிட்டதாகக் கூறி தனது மருத்துவ சிகிச்சைக்காக உதவி கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார் வெங்கல் ராவ். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.






2 லட்சம் நிதி வழங்கிய சிம்பு


வடிவேலுவுடன் 30க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்த வெங்கல் ராவுக்கு வடிவேலு ஏன் உதவி செய்யவில்லை என்கிற வகையில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கெனவே வடிவேலு ட்ரூப்பில் இருந்த போண்டா மணி உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தது வடிவேலு மீது பெரும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இப்படியான நிலையில் வெங்கல் ராவ் விவகாரத்திலும் வடிவேலு அமைதி காப்பது அவர் மீது நிறைய விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.






வெங்கல் ராவின் வீடியோ பல திரைப் பிரபலங்களை சென்று சேர்ந்த நிலையில் நடிகர் சிம்பு வெங்கல் ராவுக்கு தற்போது உதவிக்கரம் நீட்டியுள்ளார். வெங்கல் ராவின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் நிதியுதவியை நடிகர் சிம்பு வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.