ஜூன் 9 ஆம் தேதிக்குப் பிறகு என் காட்டில் அடைமழை தான் என டக்கர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். 


கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில், பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில்,  நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் 'டக்கர்’. இதில் ஹீரோயினாக நடிகை திவ்யான்ஷா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் நடித்துள்ளனர். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ஜூன் 9 வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.


குஷி படத்தின் கதை அல்ல


இதனிடையே பட ரிலீஸை முன்னிட்டு சென்னையில் இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது.  இதில் பேசிய நடிகர் சித்தார்த், “நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பத்திரிகையாளர்கள் முன் வருகிறேன்.  இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இந்த படத்தின் கதையை முதல் முறையாக சொல்லும் போது சில விஷயங்கள் ஹைலைட்டாக இருந்தது. ஒரு கார் பந்தயத்தில் கார் எப்படி வேகமாக போகுமோ அப்படி வேகமாக ஓடும் கதையாக இது இருந்தது. டக்கர் என்பதற்கு அர்த்தம் ஒவ்வொரு இடங்களிலும் மாறி கொண்டே இருக்கும். இந்த படத்தில் டக்கர் என பயன்படுத்தியதன் அர்த்தம் மோதல் . ஒரு பெண்ணுக்கும் பையனுக்குமான மோதல். குஷி மாதிரி இரண்டு காதலர்களுக்கு இடையிலான கதையா என்றால் அதுவும் இல்லை. 


டக்கர் என்பது ஒரு கோபக்காரனின் கதை. எந்த காலகட்டத்திலும் இளைஞர்களுக்கு வரும் கோபம் தான். நான் பணக்காரனாக வேண்டும். ஆனால் என்னால் முடியலை. அந்த கோபத்தை யார் மேல எப்படி எங்கு காட்ட வேண்டும் என்று தெரியாமல் காட்டுகிற இளைஞனின் கதை. அவன் வாழ்க்கையில் நடக்கும்  சுவாரஸ்யங்கள் தான் கதை.இது வழக்கமான கதையாக இல்லாமல், கொஞ்சம் வித்தியாசமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். எனக்கு இதுவரை கோபக்கார கதாபாத்திரம் நிறைய கொடுக்கப்பட்டுள்ளது. சில படங்கள் பண்ணிருக்கேன். சில படங்கள் பண்ணவில்லை. 


இயக்குநர்கள் சொன்னபடி எடுக்க மாட்டார்கள் 


இதுவரை நடித்த படங்களில் கூட கதையில் ஆரம்பத்தில் இந்த மாதிரி காட்சிகளை நிறைய சொல்வார்கள். பின்னர் படிப்படியாக அதனை குறைந்து பாடல் அல்லது ரொமான்ஸ் காட்சிகளாக மாற்றி விடுவார்கள். இந்த படத்திலும் கார்த்திக்கிடம் 5 சண்டை காட்சிகள் என்றால் எல்லாம் இருக்குமா? இல்லை குறையுமா? என்று கேட்டேன். இயக்குநரோ, இதுவரை உங்களை எல்லாரும் அமைதியான கதாபாத்திரத்தில் தான் பார்த்திருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக, முரட்டு தனமாக பார்ப்பார்கள் என்றும் கூறினார். மேலும் சண்டை காட்சிகளில் நிறைய அடி வாங்கிருக்கேன். நிறைய நேரங்களில் என்னை நானே பாராட்டி இருக்கேன்.


இந்த படம் வெளியாகும் ஜூன் 9 ஆம் தேதி சித்தார்த்துக்கு ஹிட் காத்திருக்கிறது. என்னுடைய காட்டில் மழை தான் என்று சொல்லுவேன். ரசிகர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டு , இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை அதிகமாக கொடுக்கும் இயக்குநராக கார்த்திகை பார்க்கிறேன்” என சித்தார்த் கூறியுள்ளார்.