‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமான நடிகர் சித்தார்த், தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்; அண்மையில் மதுரை விமான நிலையத்திற்கு குடும்பத்துடன் சென்ற இவரை, அங்குள்ள  சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் துன்புறுத்தியதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டார். இந்த ஸ்டோரியை பார்த்த பலர், சித்தார்த்திடம் என்ன நடந்தது என கேள்வி எழுப்பினர்; அந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், இன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் அங்கு நடந்த சம்பவத்தை விளக்கமாக பதிவிட்டு இருக்கிறார்; 






அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில், “ நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. நேற்று நான் ஷேர் செய்து இருந்த ஸ்டோரியை பார்த்து பலரும் அக்கறையாக கேள்வி கேட்டு இருந்தனர். நான் பலமுறை மதுரை விமான நிலையம் வழியாக மற்ற நகரங்களுக்கு சென்றுள்ளேன். இதுவரை அங்கு எனக்கு எந்தவொரு சங்கடமும் நேர்ந்ததில்லை.


இம்முறை, எனது குடும்பத்தினருடன் நான் சென்று இருந்தேன். அப்போது விமான நிலையத்தில் யாரும் இல்லை. அங்கிருந்த சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி, எங்களிடம் கடுமையாக நடந்து கொண்டார். என்னுடைய பையை ஆய்வு செய்த அவர், என்னுடைய உபகரணங்களை தூக்கி எறிந்தார். நான் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்ன போதும் தொடர்ந்து எங்களிடம் ஹிந்தி மொழியில் பேசினார். 


பெரியவர்களிடம் பண்பாக நடந்து கொள்ளலாம் என்று சொன்னதற்கு, எனது அம்மாவின் பையில் இருந்த சில்லறைகளை வெளியே எடுக்க சொன்னார். அத்துடன், இது இந்தியா, நாங்கள் சொல்வதைதான் நீங்கள் செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.


என்னுடைய சகோதரியிடம், மருத்துவ ஊசிகளை எதற்காக வைத்து இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார். ஒரு பொது இடத்தில் அனைவரின் முன், தனிப்பட்ட விஷயங்களை கேட்பது தவறு என்பதால், என் எதிர்ப்பை தெரிவித்தேன்; என் முகத்தில் இருந்த மாஸ்க்கை கழட்டிய பின், அங்கிருந்த ஒருவர், நான் உங்களின் ரசிகர். நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் செல்லலாம் என்றார்.


இதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒரு பிரபலம் என்பதால் எங்களுக்கு நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள். அப்போது, பொது மக்களிடம் இப்படிதான் மோசமாக நடந்து கொள்வீர்களா. பெரியவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று அவரிடம் சொன்னேன்; என் பெற்றோர்களிடம் அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார்கள்.




இது என்னை அச்சுறுத்தியது. விமான நிலையங்களில் வேலை செய்வது மிகவும் கடினமான ஒன்று. இது அமைப்பினால் ஏற்படும் பிரச்சினை அல்ல. தனிமனிதர் ஒருவர், அவருள் இருக்கும் கோபத்தை மற்றவர் மீது காட்டுவதாக இருக்கலாம். ஆனால் இப்படி கோபத்தை வெளிப்படுத்துவது ஒருபோதும் நியாயமாகாது; என்னை ஸ்பெஷலாக நடந்துங்கள் என்று கூறவில்லை. உங்கள் பெற்றோருக்கு இது போன்று நடந்து இருந்தால் நீங்கள் என்னை போன்றுதானே நடந்துகொள்வீர்கள் ?” என்று சித்தார்த் அங்கு நடந்தவற்றை குறித்து விளக்கமாக பதிவு செய்துள்ளார்.


இவர் வெளியிட்ட பதிவில், சிலர்,  “ சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்ட் செய்யக்கூடாது.” என்றும் சமூகவலைதளவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.