அஜித்தின் டேர்டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் அடுத்தடுத்து முக்கிய பிரபலங்கள் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் டேர்டெவில் திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் அவர் அஜித்திற்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். 

Continues below advertisement

டேர்டெவில் 

நடிகர் அஜித் குமார் நடிக்கும் 64-வது திரைப்படம் டேர்டெவில் . குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார். ஷாலினி அஜித் குமார் தனது பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் (Bravehearts Production) நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். இதன் மூலம் ஷாலினி தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படத்தில் ஸ்ரீலீலா, உன்னி முகுந்தன், பார்த்திபன், பிரபு, சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நவம்பர் 2-ஆம் தேதி சென்னையில் படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், நவம்பர் 12 முதல் ஹைதராபாத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தொடர்ந்து பாங்காக், மலேசியா உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

வில்லனாக நடிக்கும் ஷிவராஜ்குமார் 

டேர்டெவில் திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி இருந்து வந்தது. தற்போது வில்லன் கதாபாத்திரத்தில்  கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அஜித்தின் மேலாளர் ஷிவராஜ்குமார் கூறுகையில் "இந்தத் திரைப்படத்தில் மிகவும் வலிமையான வில்லன் கதாபாத்திரம் ஒன்று உள்ளது; இதற்காகப் பல பெயர்களை நாங்கள் பரிசீலித்து வந்தோம். சிவராஜ்குமார் சார் மீது அஜித் சாருக்கு மிகுந்த மரியாதை உண்டு, எனவே அவரை அணுகுவது என்று நாங்கள் முடிவு செய்தோம்.

Continues below advertisement

மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பு, ஆதிக் அவரிடம் சென்று கதையை விவரித்தார்; அதற்கு அவர் உடனடியாகச் சாதகமான பதிலை அளித்தார். அதன் பிறகு, அஜித் சாரே அவரிடம் பேசினார். அவர் நவம்பர் 17 அல்லது 18-ஆம் தேதியன்று படப்பிடிப்பில் கலந்துகொள்வார்." என்று தெரிவித்துள்ளார். 

ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை ஷிவராஜ்குமார் பெற்றுள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் பிகாஸோ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது டேர்டெவில் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவிருப்பது அஜித் ரசிகர்களுக்கு பெரியளவில் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.