பெங்களூருவில் சித்தா பட நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்துக்காக நடிகர் சித்தார்த்திடம் சிவராஜ் குமார் மன்னிப்பு கேட்டுள்ளார்.


வெளியேற சொன்ன கன்னட அமைப்பினர்


சித்தார்த் நடிப்பில் அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் சித்தா. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுக்காக நேற்று சித்தார்த் நேற்று பெங்களூரு சென்ற நிலையில், தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கன்னட அமைப்பினர் விழாவில் திடீரென முற்றுகையிட்டு, முழக்கமிட்டனர்.


மேலும் சித்தார்த்தை அந்த நிகழ்வை விட்டு வெளியேறுமாறு கன்னட அமைப்பினர் வற்புறுத்தி,  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு சில நிமிடங்களில் சித்தார்த் சிரித்தபடி நிகழ்வை முடித்துக்கொண்டு வெளியேறினார்.


 






மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்


இந்த நிகழ்வு திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ள நிலையில், முன்னதாக நடிகரும் கர்நாடகாவைச் சேர்ந்தவருமான பிரகாஷ் ராஜ் இதற்காக சித்தார்த்திடம் மன்னிப்பு கோரி இருந்தார். இந்நிலையில் அவரது வரிசையில் தற்போது பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் சித்தார்த்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.


நடிகர் சிவராஜ் குமார் ஜெயிலர் படத்தில் நடித்தது முதல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவராக மாறியுள்ளார். மேலும் கேப்டன் மில்லர் படத்திலும் நடிகர் தனுஷூடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


சிவராஜ் குமார் மன்னிப்பு


இச்சூழலில் சித்தா நிகழ்ச்சியில் இருந்து சித்தார்த் வெளியேற்றப்பட்டது மன வேதனை அளிக்கிறது என நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து மொழி படங்களையும் பார்க்கக்கூடியவர்கள் கன்னட மக்கள் என்றும், அம்மக்கள் சார்பாக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே நீண்ட காலமாக  நிலவி வரும் காவிரி விவகாரம், கடந்த சில நாட்களாகவே மீண்டும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டுக்கு கர்நாடகா அரசு காவிரி நீரைத் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் முன்னதாக உத்தரவிட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.


டெல்லியில் ஆலோசனைக்கூட்டம்


தொடர்ந்து இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் சற்று முன் தொடங்கி நடைபெற்று வருகிறது.


முன்னதாக சித்தார்த்துக்கு நிகழ்ந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்ட நடிகர் பிரகாஷ்ராஜ், “பல காலம் பழமையான இந்தப் பிரச்னையைத் தீர்க்கத் தவறிய அனைத்து அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்கு பதில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேள்வி கேட்பதற்கு பதில், சாமானியர்களையும் கலைஞர்களையும் இப்படி தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பிலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.