ஜெயிலர் 2


நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி படப்பிடிப்பை முடித்த கையோடு அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். நெல்சன் ரஜினி கூட்டணியில்  2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. வசூல் ரீதியாக இப்படம் உலகளவில் 625 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இப்படத்தை தயாரித்த சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் நெல்சன் மற்றும் ரஜினி கூட்டணியில் ஜெயிலர் 2  உருவாகும் அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் பூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து நேற்று ஏப்ரல் 12 ஆம் தேதி முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியது.முதற்கட்டமாக கேரளாவில் படப்பிடிப்பு தொடங்கியது. மொத்தம் 14 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இடையிலான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெயிலர் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் தான் ஒரு சின்ன ரோலில் நடிப்பதாக கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் உறுதிபடுத்தியுள்ளார்


ஜெயிலர் 2 படத்தில் ஷிவ ராஜ்குமார்



ஜெயிலர் படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார் மற்றும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்கள். இருவருக்கும் தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. ஜெயிலர் 2 படத்தில் பாலையா நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ஷிவராஜ்குமார் நடிக்க இருப்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.  






நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் " நான் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் எவ்வளவு சின்னதாக இருந்தாலும் பரவாயில்லை. என் அம்மா சத்தியமாக சொல்கிறேன் , படத்தில் நான் சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டு டிஸூ பாக்ஸை தள்ளி வைத்தேன் அவ்வளவுதான்  இவ்வளவு பெரிய வரவேற்பு எனக்கு ஏன் கிடைத்தது என்று தெரியவில்லை. " என ஷிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்