சமூகக் கருத்துகளை படங்களில் பேசுவதற்கான தைரியம் தனக்கு ஆரம்பக் காலத்தில் இருந்தது என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். 


குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, இயக்குநர் ராஜீவ் மேனன், நடிகை தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, பிக்பாஸ் மாயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘வெப்பன்’ (Weapon). இப்படம் தியேட்டரில் இன்று வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணா இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். சூப்பர்  ஹியூமன் திரைப்படம் என விளம்பரப்படுத்தப்பட்ட இப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 






இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய சத்யராஜ் படங்களில் சமூக கருத்து, அரசியல் பேசுவது பற்றி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், “படத்தில் சமூகக் கருத்து பேசுவது, கதை அமைவது என்பது நான் திட்டமிடுவது அல்ல. ஆரம்ப காலத்திலேயே என்னிடம் அந்த தைரியம் இருந்தது. எனக்கு, மணிவண்ணனுக்கு எல்லாம் என்ன நடந்து விட போகிறது என்ற எண்ணம் இருந்தது. சமூகக் கருத்து பேசும்போது நடப்பு அரசியலில் இருப்பதை வைத்து பேசுவது தான் தைரியம். சினிமா இல்லாவிட்டால் விவசாயம், கார் ஓட்டுவது என பண்ணப் போகிறோம். பம்மி எல்லாம் என்னால் வாழ முடியாது. சிலருக்கு சொல்லுவதற்கு தைரியம் இருக்கிறது. சிலர் தனிப்பட்ட வாழ்விலேயே எதிர்க்கிறார்கள். பிரகாஷ்ராஜ் எல்லாம் அடித்து தூள் கிளப்புகிறார். வாழ்க்கையில் மனசாட்சியுடன் சொல்வது சரியா தப்போ சொல்வதை தான் பார்க்க வேண்டும். 


மோடி பயோபிக்கில் நான் நடிக்கிறேன் என யாரோ கிளப்பி விட்டுள்ளார்கள். கிசுகிசு என்பது அந்தக் காலத்தில் இருந்தே இருக்கிறது. இந்த ஹீரோயினுடன் தான் நடிப்பேன் என அடம்பிடிக்கிறார். புது வீட்டின் பெட்ரூம் இப்படித்தான் இருக்கும் என கிளப்பி விடுவார்கள். இப்ப ஊடகம் வேறு மாதிரி வந்த பிறகு நெகட்டிவாக சொன்னால் தான் பிரபலமாகிறது. பிரபலங்கள் பற்றி நெகட்டிவாக எழுதினால் தான் ரசிப்பார்கள். நம்மை திட்டி எழுதுகிறார்கள் என்றால் பிரபலமாக இருக்கிறோம் என்று அர்த்தம்" என சத்யராஜ் தெரிவித்துள்ளார்.