சூரியின் வளர்ச்சியை சந்தோசமாக பார்ப்பதாகவும், இனிமேல் அவர் ஹீரோ தான் எனவும் நடிகர் சசிகுமார் புகழ்ந்துள்ளார்.
துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள படம் “கருடன்”. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். மேலும் சமுத்திரகனி, ஷிவதா, ரோஷினி ஹரிப்பிரியன், மைம் கோபி, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த கருடன் படம் கடந்த மே 31 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இந்த படத்தின் மூலம் சூரி நடிப்பில் வெறொரு பரிணாமம் அடைந்துள்ளதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
படத்தின் சில காட்சிகள் கணிக்கக்கூடியதாக இருந்தாலும் திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் துரை செந்தில் குமார். குறிப்பாக இடைவேளை சண்டை காட்சி பிரமிப்பாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. நட்பு, துரோகம் உள்ளிட்ட பல விஷயங்களை கலந்து கட்டி சொன்ன கருடன் படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளியுள்ளது.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநரும், நடிகருமான சசிகுமார், “சூரியின் வளர்ச்சியை சந்தோசமாக பார்க்கிறேன். நட்புக்காக தான் இந்த படத்தில் நடித்தேன். என்னுடைய சுந்தரபாண்டியன் படத்தில் தான் முதல்முதலாக சூரி படம் முழுக்க வந்திருப்பார். இன்னொரு ஹீரோ மாதிரி இருப்பார். சூரியை எல்லாருக்கும் பிடிச்சதால தான் இன்னைக்கு படம் பார்க்க அனைவரும் வருகிறார்கள். இரண்டு பேரும் பக்கத்து பக்கத்து ஊரு தான். சூரியின் கடின உழைப்பு பற்றி தெரியும்.
காமெடியானாக நடித்து வந்த சூரியை விடுதலை படத்தின் முதல் காட்சியிலேயே வெற்றிமாறன் மாற்றினார். இனிமேல் பரோட்டா சூரி எல்லாம் கிடையாது. விடுதலை சூரி, கருடன் சூரி என சொல்வார்கள்.விடுதலை படத்தில் அவர் கதையின் நாயகன், கருடன் படத்திற்கு பிறகு அவர் கதாநாயகன். சூரிக்காக இனி கதை பண்ணுவார்கள். ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ஒருவர் 10 பேரை அடிப்பதை மக்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கருடன் படத்தில் சண்டை காட்சிகளை கைதட்டி ரசிக்கிறார்கள் என்றால் ஏற்றுக்கொண்டார்கள் என்றே நினைக்கலாம். பரோட்டா சூரி என்ற பெயர் இனி மறக்கப்படும். அவர் படத்தில் வேறொருவர் காமெடி பண்ணும் நிலை உண்டாகும்” என தெரிவித்துள்ளார்.