நான் வாழ்க்கையில வித்யாசமாகவே வாழ்ந்து வருபவன். அதனால் என்றைக்கும் இதுதான் என் வேலை என்று பணியாற்றியதில்லை என நடிகர் சரத்குமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படும் சரத்குமார் வில்லனாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். தொடர்ந்து ஹீரோ, குணச்சித்திர நடிகர் என பல பரிணாமங்களில் தன்னை மெருகேற்றிய அவர் பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் சாதனைப் படைத்தவர். இந்த நிலையில் அவர் சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
மனைவியை நினைத்து பிரமிப்பேன்
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய சரத்குமார், “நான் சினிமாவில் 40 ஆண்டுகள் நிறைவு செய்து விட்டேன். ஆனால் அதைப் பற்றி ஒருபோதும் யோசித்ததில்லை. அதேசமயம் என்னுடைய மனைவி ராதிகா திரைத்துறையில் 48 ஆண்டுகள் நிறைவு செய்து விட்டார். அதைப் பற்றி அடிக்கடி சிந்திப்பேன். ஒரு நடிகையாக வெற்றிகரமான நபராக இவ்வளவு தூரம் பயணித்து வந்திருக்கிறார். இன்றைக்கும் தாய்கிழவி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அவர் கொண்டாடப்பட வேண்டியவர்.
நான் வாழ்க்கையில வித்யாசமாகவே வாழ்ந்து வருபவன். சைக்கிளில் சென்று பேப்பர் போடுவேன், சைக்கில் ஃபிட்டராக இருந்தேன். காபி ஷாப்பில் வேலை செய்தேன். பத்திரிக்கையாளராக இருந்தேன். டிராவல் ஏஜென்ஸி வச்சிருந்தேன். டிவி ஷோரூம் நடத்தினேன். அதன்பிறகு தான் சினிமாவுக்கு வந்தேன்.
இந்த உலகம் போட்டி நிறைந்தது
அப்போது படம் தயாரிப்பது பற்றியும், நடிப்பது பற்றியும் யோசனை இருந்தது. இதுதான் என் கேரியர் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. நான் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிப்பேன் என்றில்லாமல் போலீஸ் கேரக்டரில் நடித்தேன். கண் சிமிட்டும் நேரம் என நான் நடித்த முதல் படம் லாபம் நிறைந்த படமாக அமைந்தது. என்றைக்கும் பேக்கப் என்ற ஒன்றை வைத்து நான் செயல்பட மாட்டேன். கடின உழைப்பை மட்டுமே மேற்கொள்வேன். இப்போது உள்ள உலகம் மிகவும் போட்டி நிறைந்தது. இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. இதற்கு முன்னால் நமக்கு நிறைய சாய்ஸ் இருந்தது.
ஆனால் உலகம் வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. எதையும் திட்டமிட்டு மேற்கொள்வது சிறந்தது. இன்றைக்கு செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாரும் ஊடகவியலாளர்களாக மாறி விட்டார்கள். அவர்கள் பத்திரிக்கை தர்மத்தை கடைபிடிக்கிறார்களா என தெரியவில்லை. எது உண்மை, எது பொய், எது ஏஐ என்ற குழப்பம் நிலவி வருகிறது. நான் பத்திரிக்கையாளராக வேலை பார்த்தபோது ஒரு செய்தியை வெளியிடும்போது அது பற்றிய சிந்தனை இருந்தது. ஆனால் இன்றைக்கு பரபரப்பாக கொடுக்க வேண்டும் என்பது மட்டும் தான் உள்ளது” என கூறினார்.
ஜென்டில்மேன் படத்தில் இருந்து விலக காரணம்
தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு ஜென்டில்மேன் படத்தின் கதை ரொம்ப பிடித்திருந்தது. நான் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனிடம் ஷங்கரை வைத்து படம் பண்ணலாம் என சொன்னேன். இடையில் அவருக்கும் இயக்குநர் பவித்ரனுக்கும் ஏதோ பிரச்னை வந்தது. குஞ்சுமோன் அந்த படம் பண்ண வேண்டாம். ஐ லவ் இந்தியா படம் பண்ணலாம் என பவித்ரன் சொன்னார். என்னை அந்த தயாரிப்பாளரிடம் அறிமுகம் செய்தது பவித்ரன் தான். அவரிடம் உதவியாளராக ஏ.வெங்கடேஷ், ஷங்கர், பாலாஜி சக்திவேல் ஆகியோர் இருந்தார்கள்.
நான் 2 படத்தையும் பண்ணி தருகிறேன் என சொன்னேன். ஜென்டில்மேன் படத்துக்காக 4 நாட்கள் போட்டோஷூட் நடைபெற்றது. ஆனால் இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. என்னை குஞ்சுமோனிடம் அறிமுகப்படுத்திய இப்படியான சில காரணங்களால் நான் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது” என சரத்குமார் கூறியுள்ளார்.