தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நடிகர் சரத்குமார். 1986ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து கோலிவுட்டில் புலன் விசாரணை படம் மூலம் சரத்குமார் அறிமுகமாகி கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.
மேலும் நடிகை ராதிகா சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட சரத்குமார் தொடர்ந்து சினிமாவுக்கு சிறு இடைவெளி விட்டு சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கி ஆக்டிவாக செயல்பட்டு வந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வந்துள்ள சரத்குமார் இறுதியாக இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
மேலும் ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படத்திலும் வில்லனாக சரத்குமார் நடித்துள்ள நிலையில், தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்து அறிவிக்கும் வகையிலும், வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களோடு சரத்குமார் பேசினார்.
“நான் இப்போது பேசுவது பெரிய பழுவேட்டரையர் பேசுவது போல் உள்ளது என்கிறார்கள், மகிழ்ச்சி. நான் எப்போதும் நல்ல தமிழ் தான் பேசி வருகிறேன். கலை உலகத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தேன். ஆனால் இப்போது தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளேன். கலை தான் என் தொழில்.
பத்திரிகை நண்பர்கள் எப்போதும் என்னிடம் உரிமையுடன் எதையும் பரிமாறி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இப்போதைய தலைமுறைக்கும் நம்மைத் தெரிய வேண்டுமென நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் பட ப்ரமோசனில் நான் கலந்துகொள்ளவில்லை எனப் பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள். ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.
மணிரத்னம் மிகச்சிறந்த பாத்திரம் தந்திருந்தார். இப்போது படம் எல்லோரிடத்திலும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. பொன்னியின் செல்வன் வாய்ப்பு தந்ததற்கு மணிரத்னத்திற்கு, லைகா புரொடக்சன் சுபாஸ்கரன் இருவருக்கும் நன்றி. இன்றைய தலைமுறைக்கு என்னை எடுத்துச் சென்ற வாரிசு படத்திற்காக வம்சி மற்றும் விஜய்க்கு நன்றி. ருத்ரன் வில்லன் பாத்திரம் என்றபோது தயங்கினேன். ஆனால் இப்போதைய ரசிகர்கள் வில்லனாக நடிப்பவர்களை அதே போன்று பார்ப்பதில்லை, அந்தக் கதாப்பாத்திரத்தை எப்படி செய்துள்ளனர் என்றே பார்க்கிறார்கள்.
அதனால் தைரியமாக நடித்தேன். அடி வாங்கும் சாதாரண வில்லனாக நடிக்க மாட்டேன். நான் நாயகனாக நடித்த காலத்தை விட இப்போது அதிகப்படம் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும். அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது.
விரைவில் அதற்காக தனியாக பத்திரிக்கை நண்பர்களைச் சந்திப்பேன். 2026இல் ஒரு மாஸான அறிவிப்பு வரும். எப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு இருந்துள்ளது. அந்த ஆதரவைத் தொடர்ந்து தாருங்கள் நன்றி” எனப் பேசியுள்ளார்.