நடிகர் சரத்குமார் மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக உருவாக காரணமான இருந்த படங்களில் ஒன்றாக சூரியன் படம் வெளியாகி இன்றோடு 31 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


பிரமாண்ட கூட்டணி 


பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரித்த இரண்டாவது படம் ‘சூரியன்’. பவித்ரன் இயக்கிய இந்த படத்தில்  சரத்குமார், ரோஜா, கவுண்டமணி, ராஜன் பி தேவ், மனோரமா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமல்லாமல் நடிகர் சரத்குமாருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது,.இந்த படத்தில் பாதி நேரம் மொட்டை தலையுடன் தான் அவர் நடித்திருப்பார்.


படத்தின் கதை 


மத்திய அரசின் உள்துறை அமைச்சர் பாதுகாப்பு படை அதிகாரியாக இருக்கும் சரத்குமாரிடம், பிரதமரை படுகொலை செய்வதற்கான திட்டத்தை உருவாக்க சொல்கிறார். இதனால் சரத்குமார் ஆத்திரமடைந்து, உள்துறை அமைச்சரைக் கொன்று விட்டுத் தப்பி டாப்சிலிப்பை அடைகிறார். அங்கு தன் அடையாளத்தை மறைத்து மொட்டைத்தலையுடன் மனோரமாவால் அடைக்கலம் கொடுக்கப்பட்டு ராஜன் பி தேவிடம் வேலைக்கு சேர்கிறார். அவரது மகளான ரோஜாவுக்கு சரத்குமார் மேல் காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் உண்மை எல்லாம் ரோஜாவுக்கு தெரிய வர என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாகும்.


கவுண்டமணியின் எவர் க்ரீன் காமெடி 


 நாம் ஏதாவது அவமானம் பட்டுவிட்டால் சமாளிப்பதற்காக ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ என சொல்வோம். அந்த டயலாக் இந்த படத்தில் கவுண்டமணியால் பேசப்பட்டது. அரசியல்வாதியாக வரும் அவர் செய்யும் அட்ராசிட்டி எல்லாம் எவர் க்ரீன் ரகம். பன்னிக்குட்டி ராமசாமி, பூ மிதி திருவிழா, போன் வயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சு, அரசியல்வாதி பாடு திண்டாட்டம் தான் காட்சிக்கு காட்சி நம் வயிறை சிரிக்க வைத்து பதம் பார்த்திருப்பார். 


சர்ச்சையை கிளப்பிய தேவா


இந்த படத்தில் இடம் பெற்ற ‘பதினெட்டு வயது’ பாடல், பக்தி பாடலான ‘சஷ்டியை நோக்க சரவண பவனார்’ பாடலின் மெட்டில் அமைக்கப்பட்டு கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதேபோல் குத்து பாடலான ‘லாலாக்கு டோல்டப்பிமா’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. இப்பாடல் மூலம் திரையில் பிரபுதேவா அறிமுகமாகியிருந்தார். வசூலிலும் சாதனைப் படைத்த சூரியன் படம் என்றும் சரத்குமார் சினிமா கேரியரில் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருக்கும் என்பது நிதர்சனம்.