பிரபல மூத்த நடிகர் சரத் பாபு(Actor Sarath Babu) உடல்நலக் குறைவால் இன்று ஐதராபாத்தில் காலமான நிலையில், அவரின் உடல் சென்னை, தி.நகரில் உள்ள வீட்டுக்குக் கொண்டுவரப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்


ஆந்திராவைச் சேர்ந்த சரத் பாபு, 1951ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். 1973-ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். 1977ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய பட்டினப் பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து, பாபா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். ஒரு புறம்  கதாநாயகனாகவும் மற்றொரு புறம் ரஜினி, கமல் இருவருடனும் பல படங்களில் நடித்தும் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றார். 


தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் சரத்பாபு 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பாக செய்யும் திறமை கொண்டவர் சரத் பாபு.


மருத்துவமனையில் அனுமதி


வருடங்கள் செல்லச் செல்ல, சினிமாவில் அவ்வப்போது குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சரத் பாபு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இறுதியாக தெலுங்கில் பவன் கல்யாண் உடன் வக்கீல் சாப் படத்தில் நடித்திருந்தார்.


தமிழில் கடைசியாக ’வசந்த முல்லை’ என்னும் படத்தில் சரத் பாபு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சரத் பாபுவுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 


 



சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாகவே சரத் பாபு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். அவர் இறந்துவிட்டதாக மே 3ஆம் தேதி தகவல் வெளியான நிலையில், அந்தத் தகவலை சரத் பாபுவின் சகோதரி மறுத்தார். இதற்கிடையே தொடர் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு, இன்று (மே 22) பிற்பகல் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். 


சென்னையில் உடல் அடக்கம்?


அவரின் உடல் சென்னை, தி.நகரில் உள்ள சரத் பாபுவின் வீட்டுக்குக் கொண்டுவரப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து நாளை (மே 23ஆம் தேதி) அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 


இதையும் வாசிக்கலாம்: Sarath Babu Death: பெரும் சோகம்.. பிரபல நடிகர் சரத்பாபு உயிரிழப்பு..! கண்ணீரில் ரசிகர்கள்..!