‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து சந்தானம் பேசும் போது,  “நாம் இங்க இருந்து எதுவும் பேச முடியாது. அவர்கள் பேசி அந்த பிரச்னைக்கு ஒரு  முடிவு எடுப்பார்கள். ஏனென்றால் இந்தப்படத்தை தயாரித்திருப்பது தெலுங்கு தயாரிப்பாளர். அவர் அதற்காக சண்டையிட்டு  ‘வாரிசு’ படத்தை ரிலீஸ் செய்வார். நமது மொழி தமிழ். நாமும் இங்கு நமது தமிழ் படத்திற்கு முன்னுரிமை கொடுப்போம். நமக்கு தமிழ் படம் முக்கியம். அதே போல இங்கிருந்து அங்கு சென்று படம் எடுப்பவர்களுக்கு நாம் நமது ஆதரவை கொடுக்க வேண்டும். அந்த வகையில் நாம் விஜய் சாருக்கு நம்முடைய ஆதரவை தெரிவிப்போம்.” என்றார்.




முன்னதாக, பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கூறி, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 


இது குறித்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில், “ தெலுங்கு திரைப்படங்களின் தயாரிப்பு செலவு அதிகரிப்பு, தயாரிப்பாளர்களின் நலன், தெலுங்குத் திரைப்படத் துறையை காப்பாற்றுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 08.12.2017 அன்று நடைபெற்ற தெலுங்குத் திரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டத்தில், சக்ராந்தி (பொங்கல்) மற்றும் தசரா (விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


 






இது தொடர்பாக, பிரபல தயாரிப்பாளரும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தற்போதைய துணைத் தலைவருமான ஸ்ரீ தில்ராஜு, 2019ஆம் ஆண்டு ஊடகங்கள் மூலம், பண்டிகைக் காலங்களில் டப்பிங் செய்யப்பட்ட தெலுங்குப் படங்களுக்கு எப்படி திரையரங்குகளை வழங்குவது என்பது பற்றி கூறியிருக்கிறார். அதன்படி, பண்டிகை காலங்களில் நேரடி  தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளித்து, அந்தப்படங்களுக்கு அளித்தது போக, மீதமிருக்கும் திரையரங்குகளை தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படும் படங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின் படி, விநியோகஸ்தர்கள் சக்ராந்தி மற்றும் தசரா பண்டிகைகளில் நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவைகளுக்கு போக மீதமிருக்கும் திரையரங்குகளை தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படும் படங்களுக்கு கொடுக்க வேண்டுமென தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது” என அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டு இருந்தது. தீபாவளிக்கு தெலுங்கில்  ‘வீர சிம்ம ரெட்டி' மற்றும் 'வால்டர் வீரய்யா'  போன்ற நேரடி தெலுங்கு படங்கள் வெளியாக இருக்கும் நிலையில், வாரிசு தெலுங்கில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு சந்தானம் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.