விடாமுயற்சி
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி . லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜனவரி 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பாக இதுவரை எந்த வித அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. மேலும் சமூக வலைதளங்களில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்களும் பரவி வருகின்றன.
இண்டு ஆண்டுகள் ரசிகர்கள் காத்திருப்பு
அஜித் நடிப்பில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு துணிவு திரைப்படம் வெளியானது. இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்து வருகிறார்கள். மற்ற ஆண்டுகளைப் போல் இல்லாமல் 2025 ஆம் ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். விடாமுயற்சி வெளியான அடுத்த சில மாதங்களில் அஜித்தின் குட் பேட் அக்லி படமும் வெளியாக இருக்கிறது. இது தவிர்த்து பல வருடங்கள் கழித்து மீண்டும் அஜித் குமார் துபாயில் நடைபெற இருக்கும் கார் ரேஸிங்கில் போட்டியிட இருக்கிறார். இதனால் அஜித் ரசிகர்கள் தங்கள் ஆவலை கட்டுப்படுத்தி காத்திருக்கிறார்கள்.
சமுத்திரகனிக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்
அஜித் பற்றி பல்வேறு நடிகர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்கள். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. தற்போது நடிகர் சமுத்திரகனி துணிவு படத்தின் போது அஜித் தனக்கு கொடுத்த அட்வைஸ் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.
" அஜித்தும் நானும் துணிவு படத்தில் சேர்ந்து நடித்தோம். அஜித் ஒருமுறை அதிக மனித நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு கடை ஏதும் இல்லை. அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவரிடம் பசிக்கிறது என சொன்னதும் அவர் ஒரு ரொட்டியும் முட்டையும் அஜித்துக்கு கொடுத்தார். அஜித் கொடுத்த பணத்தையும் அவர் வாங்க மறுத்துவிட்டார். இந்த கதையை என்னிடம் சொன்னவர் நீங்கள் பைக்கை எடுத்துக் கொண்டு தனியாக ஒரு பயணம் போகனும்.உங்களை யாரென்றே தெரியாத மனிதர்கள் இடத்திற்கு செல்லும் போது உங்களை நீங்களே உணர்ந்துகொள்வீர்கள் என்று கூறினார்.