சாதி ரீதியிலான படங்களை எடுப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என நடிகர் எஸ்.வி.சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


அறிமுக இயக்குநர் அஜித்குமார் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் “முகை”. இந்த படத்தில் கிஷோர் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், முகை என்பது நிஜமாகவே நல்ல தமிழ் பெயர். சின்ன படம் என்பது தயாரிப்பு செலவு குறைவாக இருந்து, கொஞ்சம் லாபம் இருந்தாலும் நல்ல படமாக மக்களுக்கு சென்றடைய வேண்டிய படமாக இருக்கும்.


ஆனால் இங்கு படக்குழுவினர், வந்தவர்களுக்கு கொடுக்கும் வரவேற்பு பட்ஜெட் எகிறும் போல இருக்குது. அரசியலுக்கு அடுத்து சினிமாவில் நேரம் என்பதை பொருட்படுத்தவே மாட்டேங்குகிறார்கள். ஒருமுறை ஒரு படத்தின் ஷூட்டிங்கில் என்னுடைய ஷெட்யூல் முடிந்த நிலையில் ஊருக்கு திரும்ப எனக்கு டிக்கெட் போடவில்லை.நான் நாளைக்கு சென்னைக்கு போக வேண்டும் என சொல்ல, அங்க போய் என்ன பண்ண போறீங்க என தயாரிப்பு தரப்பு கேள்வி எழுப்பினார்.


நான் உடனே ‘முடி வெட்டிக்கப் போகிறேன்’ என சொன்னேன். என்ன இப்படி பேசுறீங்க என எதிர்தரப்பில் இருந்து பேசிய நபர் கேட்க, உனக்கு கொடுத்த ஷெட்யூல் முடிஞ்ச பிறகு நான் என்ன பண்ணா உனக்கு என்ன என கேட்டேன். அதனால் தான் எனக்கு சினிமா, அரசியலில் கெட்ட பெயர் வருகிறது. 


என்னை விட வயதில் பெரியவர்களை, அனுபவசாலிகளை நான் மதித்ததால் அவர்களின் ஆசீர்வாதத்தால் தான் இன்றைக்கு நன்றாக இருக்கிறேன். பொதுவாக படங்கள் வெற்றி படமாகவும், தோல்வி படமாகவும் இருக்கலாம். தோற்றாலும் நல்ல படமாக இருக்க வேண்டும்.  அப்ப தான் வாழ்க்கையில் சொல்லிக்கொள்ள பெருமையாக இருக்கும். நாம் என்ன செலவழிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 


80,90களின் காலக்கட்டத்தில் எல்லாம் படத்தின் தொடக்கத்தின் கடவுளை காட்டுவார்கள். ஆனால் இப்போது சியர்ஸ் என டாஸ்மாக்கில் குடிப்பதை காட்டுகிறார்கள். மதுபானத்திற்கு எதற்கு விளம்பரம் கொடுக்குறீங்க. பணத்துக்காக தரம் தாழ்ந்து சினிமா எடுத்து சமூகத்தை கெடுப்பேன் என்றால் முதலில் பாதிக்கப்படுவது அவர்கள் குடும்பம் தான்.சினிமாவில் சாதி ரீதியான படங்களை எடுப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.


சாதியை தூக்கி பிடிங்க.. ஆனால் அடுத்த சாதியை தப்பா பேசாதீங்க. எல்லா சாதி மக்களும் பார்க்க வேண்டும் என்றால் எல்லா சாதி மக்களுக்கும் பிடிக்கும்படி படத்தை எடுங்கள் என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.