அஜித் குமார்


மே 1ஆம் தேதி என்றால் எல்லாருக்கும் பொதுவாக நினைவுக்கு வருவது உழைப்பாளர் தினம். அடுத்தபடியாக நினைவுக்கு வருவது நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும்  நடிகர் அஜித் குமார் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். அந்த வகையில் இந்த ஆண்டு அஜித் குமார் நடித்த பில்லா, மங்காத்தா மற்றும் தீனா ஆகிய படங்கள் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகியுள்ளன. அஜித் ரசிகர்கள் படையெடுத்துச் சென்று இந்தப் படங்களைப் பார்த்து அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.


அஜித்திடம் எல்லாருக்கும் பிடித்த ஒரு அம்சம் என்றால் தன்னைப் பெரிய அளவில் அவர் விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் பலருக்கு தொடர்ச்சியாக உதவிகளை செய்து வருகிறார். தமிழ் திரையுலகில் அஜித் குமார்  மறைமுகமாக செய்த உதவிகள் நிறைய. அதே நேரத்தில் நல்ல திறமையுள்ள அறிமுக இயக்குநர்களின் மேல் நம்பிக்கை வைத்து தனது படங்களை இயக்கும் வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார். அப்படி அவர் வாய்ப்பளித்தவர் தான் இயக்குநர் மற்றும் நடிகர் எஸ். ஜே சூர்யா.


எஸ்.ஜே சூர்யா இயக்கிய முதல் படம் அஜித் நடித்த வாலி. இப்படம் வெளியாகி நேற்று ஏப்ரல் 30ஆம் தேதியுடன் 25 ஆண்டுகள் கடந்துள்ளன. இன்று அஜித் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்.ஜே சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதுடன் தன்னை நம்பி வாய்ப்பளித்ததற்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார். 


அஜித் பற்றி எஸ். ஜே சூர்யா






தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எஸ்.ஜே.சூர்யா “ ஹேப்பி உழைப்பாளர் தினம் . இந்த உழைப்பாளிக்கு வாய்ப்புக் கொடுத்த சூப்பர் உழைப்பாளி அஜித் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாலி படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துள்ளன. கடவுள். என் அப்பா, அம்மா, அஜித், அன்பும் ஆருயிருமான நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி“ என்று பதிவிட்டுள்ளார்.


ஆதிக் ரவிச்சந்திரன்






எஸ்.ஜே சூர்யா தொடர்ந்து அஜித் நடிக்க இருக்கும் குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் முதன் முதலில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் . இத்துடன் அவர் “ ஒரு ஃபேன்பாயாக இருந்து இன்று ஃபேன் பாய் இயக்குநராக மாறியிருக்கிறேன். குட் பேட் அக்லி படத்திற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சார்” என்று பதிவிட்டுள்ளார்.


தீனா ரீரிலீஸ் குறித்து ஏ.ஆர் முருகதாஸ்






இன்று திரையரங்கில் தீனா படம் ரீரிலீஸ் ஆகியிருப்பதைத் தொடர்ந்து இயக்குநர் முருகதாஸ் தனது எக்ஸ் தளத்தில் இப்படி பதிவிட்டுள்ளார் “ என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு படம் தீனா. தல என்கிற வார்த்தைக்கு அடையாளம் கொடுத்த நடிகர் அஜித் குமாருக்கு நன்றி.  தீனா படத்தின் ரீரிலிஸை திரையரங்கில் அனைவரும் கொண்டாடுவோம்” என்று கூறியுள்ளார்.