சில நடிகர்கள் அவர்களது காலம் கடந்தும் மக்களால் நினைவுகூறப்படுவார்கள். அந்த நடிகர்களைப் பற்றிப் பேசினாலே மக்களிடம் ஒரு கூடுதல் பரவசம் தொற்றிக் கொள்ளும் நடிகர் ரகுவரன் அத்தகையவர்களில் ஒருவர். எத்தனை வில்லன் நடிகர்கள் தமிழ் சினிமாவில் தோன்றினாலும் ‘பாட்சா’ மார்க் ஆண்டனிக்கு ஈடு இல்லை என்று இன்றும் சொல்பவர்கள் உண்டு. 2008 மார்ச் 19 அன்று அவர் இறந்த நிலையில் 14 வருடங்கள் கழித்து அவருடைய சில பெர்சனல் பக்கங்கள் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகரும் ரகுவரனின் இணையருமான ரோஹினி மொல்லெட்டி. 






‘இந்த மீடியா உலகில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. இங்கே எது நடந்தாலும் அதுக்கு நாம ரியாக்ட் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உதாரணத்துக்கு ரகுவரன் இறந்தபோது ரிஷியை அழைத்துக் கொண்டு பார்க்கச் சென்றேன். ஒரு சிறுவனுக்கு மீடியா சுற்றி நிற்பது எல்லாம் பெரிய அழுத்தம் தரும். அதனால் பத்திரிகையாளர்கள் சுற்றி நிற்க வேண்டாம் என கேட்டுக் கொண்டேன்.ஆனால் அவர்கள் அதைக் கேட்கவே இல்லை. ரகு இறந்த போது என் குடும்பத்துக்கு அங்கே ப்ரைவஸியே இல்லை.


இதனாலேயே என் மகன் ரிஷி இப்போது கூட கேமராவில் தோன்ற தயங்குகிறான். இந்தியாவில் நான் உன்னுடன் எங்கேயும் ஒன்றாக வெளியே வரமாட்டேன்.உடனே புகைப்படம் எடுத்துப் போட்டுவிடுகிறார்கள். அது எனக்கு பிடிக்கலை என்றான்.


ரகுவின் இசை ஆல்பம் வெளியீட்டில் கூட ரஜினி சார் அவனை வற்புறுத்தி ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்தார். ரிஷி இப்போது வெளிநாட்டில் ப்ரீ-மெட் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான். படிச்சு முடிச்சுட்டு இந்தியாவுக்கு வரணும் என்பதுதான் எங்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம்’ என்கிறார்.