நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என நடிகரும், இயக்குநருமான ரமேஷ் கண்ணா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு அதிகளவில் அடிபட்டு வருகிறது. அதற்கு அச்சாரமாக கடந்த வாரம் விஜய் நடத்திய 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பார்க்கப்பட்டது. மேலும் அவரது மக்கள் இயக்கமும் மக்களுக்கான நலத்திட்ட பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இதனிடையே விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனது மக்கள் இயக்கத்தினரை களமிறங்கி ஒரு ஒத்திகை பார்த்து விட்டதால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் அரசியல் களம் காண்பது உறுதி என அவரது ரசிகர்கள் நம்பிக்கையும் காத்திருக்கின்றனர்.
இப்படியான நிலையில் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என நடிகரும், இயக்குநருமான ரமேஷ் கண்ணா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் விஜய்யுடன் உள்ள நட்பு
‘விஜய் எனக்கு சிறந்த நண்பர். ப்ரண்டஸ் என நீங்க தேடினால் நான், விஜய், சூர்யா 3 பேரும் இருப்பது தான் வரும். விஜய்யுடன் நடித்ததால் தான் அந்த படத்தின் என் கேரக்டர் இந்த அளவுக்கு பேசப்படுகிறது. சமீபத்தில் என்னை பார்த்த வடமாநிலத்தைச் சேர்ந்த 5 வயது குழந்தை ப்ரண்டஸ் படத்தில் இடம்பெற்ற ‘கிருஷ்ணமூர்த்தி’ பெயரை சொல்கிறார். என்னுடைய மகன் கல்யாணத்துக்கு வருவாருன்னு நினைச்சி கூட பார்க்கல. அஜித் வெளிநாடு போறேன். அதனால் வர முடியாது என சொல்லி விட்டார். அவருக்கு நன்றி சொல்ல கூட எனக்கு நேரம் இல்ல. விஜய் வந்துட்டு போன பிறகு 2 மணி நேரத்துக்கு செம டிராஃபிக் ஆயிடுச்சி.
அப்ப பார்த்த விஜய்க்கும், இப்ப நாம பார்க்கும் விஜய்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சினிமா மேல அவருக்கு ஒரு ஈடுபாடு இருக்குது. ப்ரண்டஸ் படம் நடிக்கிறப்ப வேறு படத்தோட ஷூட்டிங் போவாரு. டப்பிங்ல பிசிறு இல்லாமல் பேசுவாரு. விஜய் ஷூட்டிங் ஸ்பாட்ல யாரையும் தொந்தரவு பண்ண மாட்டாரு. ஆனால் அதனை ப்ரண்ட்ஸ் படத்தில் அந்த கடிகாரம் உடைக்கிற சீனை நிறைய டேக் எடுக்கும் அளவுக்கு சூர்யாவும், விஜய்யும் சிரிச்சிட்டே இருப்பாங்க’ என தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வர வேண்டும்
அப்போது விஜய் அரசியல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் அரசியலுக்கு வரணும். நல்லவங்க வந்தா தான் நாட்டுக்கு நல்லது நடக்கும். ஒரு சப்போர்ட் தான். எவ்வளவு காலம் தான் ஒருத்தரே நின்னு போராடுவாரு. விஜய் ஒரு சப்போர்டா இருப்பாரு. தமிழ் மக்களுக்கு ஒரு சப்போர்ட் வேணும்னா விஜய் வரணும். ரஜினி வர்றேன்னு சொல்லிட்டு வர முடியல. கமலை போல அடிப்படை வரை எல்லாமே விஜய் தெரிஞ்சிக்கிட்டு வரணும். அப்படி வந்தா வாழ்க்கையில ஒரு நல்ல இடத்துக்கு வருவாரு.