நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ராஜ்கிரணுக்கு நயினார் முகமது என்ற மகனும், ஜீனத் பிரியா என்ற ஒரு வளர்ப்பு மகளும் உள்ளனர்.  இந்நிலையில்,  சன் டிவியில் ஒளிபரப்பான  நாதஸ்வரம் தொடர் மூலம் பிரபலமான முனீஸ்ராஜாவை, ஜீனத் பிரியா காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் வெவ்வேறு மதம் போன்ற காரணங்களால், அவர்களது திருமணத்திற்கு ராஜ்கிரண் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.  பல பிரச்சனைகளை சந்தித்தும் பெற்றோரின் சம்மதத்திற்காக காத்திருந்துள்ளனர்.  கடைசியில் முனீஸ்ராஜாவின் குடும்பத்தினர் இவர்கள் காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து முனீஸ்ராஜா - ஜீனத் திருமணம் கோவிலில் வைத்து சிம்பிளாக நடந்து முடிந்தது. தங்களது  திருமணத்தை அவர்கள் பதிவும் செய்துள்ள்னர்.


ராஜ்கிரண் காட்டம்:


இதுதொடர்பாக பேசிய ராஜ்கிரண், தனக்கு நயினார் முகமது என்ற மகனைத் தவிர வேறு பிள்ளைகள் கிடையாது என்றும் ஒரு வளர்ப்பு மகள் இருந்தார், அவரை சீரியல் நடிகர் வசப்படுத்தி திருமணம் செய்து கொண்டார் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதைதொடர்ந்து. முனீஷ் ராஜா - பிரியா தம்பதி தனியாக வசித்து வந்தனர். 






ராஜ்கிரண் மகளின் வீடியோ: 


இந்நிலையில் தான் தன்மீது தவறான பொய் புகார்கள் பரப்பப்படுவதாக, பிரியா முனீஷ்ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது பெற்ற தாயான பத்ம ஜோதி என்கிற கதீஜா ராஜ்கிரண், ராஜ்கிரண் சாரின் தூண்டுதலின் பேரில் தன் மீது காவல்நிலையத்தில் பொய் புகார் அளித்துள்ளார். கல்யாணத்திற்கு பிறகு, யூடியூபில்  தன்னை குறித்து வெளியாகும் வீடியோக்களில்  ஆள் வைத்து மோசமான கமெண்டுகளை பதிவு செய்வது.செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மன உளைச்சளை ஏற்படுத்துவதோடு, உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் தன்னை பற்றி தனது தாய் மோசமாக பேசுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.


பொய் குற்றச்சாட்டுகள்:


தன்னுடைய அப்பா மற்றும் உறவினர்கள் தனக்கு வழங்கிய நகைகள் ராஜ்கிரண் வீட்டில் உள்ளது. அதை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டேன்.  அதோடு தன்னுடைய நேரடி தந்தையை சந்தித்து தனக்கு உதவுமாறு கேட்டு இருந்தேன். இதன் காரணமாக தனது தந்தை மீதும், வெளிநாட்டில் உள்ள தனது தம்பி ஆகியோருடன், தன் மீதும் தனது கணவர்  மீதும் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  முசிறி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இருந்து சம்மன் வந்துள்ளது. அதுதொடர்பான விசாரணைக்காக காவல்நிலையத்தில் இன்று (டிச.1)ஆஜராக உள்ளேன். அதன்பிறகு செய்தியாளர்களை சந்திக்க தயாராக உள்ளதாகாவும் , பிரியா முனீஷ் ராஜா தெரிவித்துள்ளார். ராஜ்கிரண் மகள் திருமணம் தொடர்பான சர்ச்சை சற்று ஓய்ந்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய வீடியோ மீண்டும் சர்சசையை கிளப்பியுள்ளது.