நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா படத்தை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை நடிகர் ராஜ்கிரண் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 


1989 ஆம் ஆண்டு ராமராஜன் நடித்த என்ன  'பெத்த ராசா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான ராஜ்கிரணுக்கு 1991 ஆம் ஆண்டு வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் அவர் களமிறங்கியிருந்தார். தொடர்ந்து அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், வீரத்தாலாட்டு உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர். 






ஹீரோவாக நடித்து வந்த அவர், அந்த பாதையில் இருந்து விலகி 2001 ஆம் ஆண்டு வெளியான நந்தா படத்தில் வித்தியாசமான கேரக்டரை செய்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை ராஜ்கிரண் பெற்றிருந்தார். பாலா இயக்கிய நந்தா படத்தில் சூர்யா, லைலா, கருணாஸ், கருத்தம்மா ராஜஸ்ரீ, ஷீலா ஆகியோர் நடித்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 


இந்த படம் ராஜ்கிரண் மட்டுமல்லாது பாலா, சூர்யாவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. குறிப்பாக சூர்யாவை விட அந்த கேரக்டர் ரொம்ப பவர் ஃபுல்லானது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நந்தா கதையில் இந்த கேரக்டர் சிவாஜியை மையமாக வைத்து எழுதப்பட்டது. அவரும் சரி என சொல்லி நடிப்பதாக இருந்தது. அந்நேரம் சிவாஜியும் மகனும், நடிகருமான பிரபு இந்த கதையை கேட்டு விட்டு பாலாவிடம் சில விஷயங்களை சொல்லியுள்ளார். 






அதில் கதை ராமேஸ்வரத்தில் நடக்கிறது. அப்பாவுக்கு வேற உடம்பு சரியில்லை. கடற்கரை வெயில், உப்பு காற்று எல்லாம் அப்பாவுக்கு சரியாக இருக்காது என தெரிவித்துள்ளார். நிலைமையை புரிந்து கொண்ட பாலா, அந்த கேரக்டரில் யாரை போடலாம் என யோசித்துள்ளார். உடனே ராஜ்கிரணை நடிக்க வைக்கலாம் என பிரபு யோசனை தெரிவித்துள்ளார். நடந்ததையெல்லாம் சொல்லி தான் பாலா ராஜ்கிரணிடம் சம்மதம் வாங்கியுள்ளார். 




இதனையெல்லாம் நேர்காணல் ஒன்றில் தெரிவித்த ராஜ்கிரண், எனக்கு எந்தவித கேரக்டரில் நடிக்கிறேன் என்பது முக்கியமில்லை. சிவாஜி நடிக்க வேண்டிய கேரக்டரில் நடித்தது சிறப்பு என்றால், கதையில் ஈழத்தமிழர்களுக்கு உதவும், அவர்கள் மேல் அன்பும் பாசமும் கொண்ட பெரியவர் என்பதாலும் அப்படத்தில் நடித்தேன் என கூறியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு ராஜ்கிரண் கதையை நகர்த்தும் கேரக்டர்களை கொண்ட பல படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.