வெற்றிமாறன் இயக்கத்தில் சென்ற மார்ச்.31ஆம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை. நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், ராஜீவ் மேனன், கௌதம் மேனன் எனப் பலர் நடித்துள்ள இந்தப் படம் பாராட்டுக்களையும் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 




அந்த வகையில் முன்னதாக விடுதலை படம் பார்த்து மகிழ்ந்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.


மேலும் விடுதலை படத்தை பாராட்டி ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “விடுதலை... இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்.


சூரியின் நடிப்பு - பிரமிப்பு. இளையராஜா இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்துக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 


ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் 'விடுதலை'. 


விடுதலை படம் 2 பாகங்களாக உருவாகியுள்ள நிலையில்,  அந்தப் படத்தின் முதல் பாகம் சென்ற மார்ச் 31 ஆம் தேதி வெளியானது. அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எ பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


கடைநிலை காவல் அதிகாரியாக இந்தப் படத்தில் நடிகர் சூரியும், விடுதலைப் படை போராளியாக வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.  இவர்கள் தவிர பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ்மேனன், கௌதம் மேனன்,  ஆகியோரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


வெற்றிமாறனுடன் இந்தப் படத்தில் இளையராஜா முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள நிலையில், காட்டு மல்லி, உன்னோட நடந்தா உள்ளிட்ட பாடல்கள் பாராட்டுகளையும், பின்னணி இசை கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.


வாச்சாத்தி சம்பவம், 1987ஆம் ஆண்டு அரியலூர் ரயில் பாலம் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல உண்மை சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் படத்தின் காட்சிகள் அமைந்துள்ள நிலையில், ஒருபுறம் விடுதலை படத்தின் கதை வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும், சோளகர் தொட்டி புத்தகங்களின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்ற்ச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 


விஜய் சேதுபதியின் வாத்தியர் கதாபாத்திரம் முதல் பாகத்தில் குறைந்த காலமே வந்த நிலையில், முதல் பாகம் அவரது கதாபாத்திரத்துக்கு லீட் கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும்,  இரண்டாம் பாகம் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை மையப்படுத்தி இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க : April 14 New Release : இந்த தமிழ் புத்தாண்டில் வெளியாகும் புதிய தமிழ் படங்கள் என்னென்ன? ஆவலுடன் காத்திருக்கும் சினிமா பிரியர்கள்