அரசியலுக்கு வருவதாக தெரிவித்து விட்டு எப்படி பின்வாங்குவது என அந்த நேரத்தில் யோசித்ததாக நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 


ரஜினி சொன்ன அனுபவம் 


சென்னையில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் வெள்ளி விழா ஒன்றில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ”திறமை ஒருவர் எப்படி பேச வேண்டும் என சொல்லும். அரங்கம் எவ்வளவு பேச வேண்டும் என சொல்லும். அனுபவம் சொல்லும் என்ன பேசணும், பேசக்கூடாது என சொல்லும்” என கூறினார். இந்த அரங்கில் என் அனுபவம் மிகவும் எச்சரிக்கையாக பேச வேண்டும் என சொன்னதாக கூறினார். 


மேலும், ஒரு மருத்துவமனையில் உடலில் முக்கியமாக உள்ள சிறுநீரக பிரச்சனை உட்பட பல பிரச்சினைகளுக்கு சிகிச்சை எடுத்தேன். ஆனால் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அப்போது தான் உலகளவில் சிறந்த மருத்துவராக ரவிச்சந்திரன் அறிமுகம் எனக்கு கிடைத்தது. உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தார். 


அரசியலுக்கு வராதது ஏன்? 


அதேசமயம் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் நான் அரசியலில் எண்ட்ரீ கொடுக்கலாம் என முடிவெடுத்தேன். அப்ப கொரோனா முதல் அலை முடிந்து  2வது அலை வந்து கொண்டிருக்கிறது.  நான் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன். ஆக இதிலிருந்து பின்வாங்கவும் முடியாது, உண்மையையும் சொல்ல முடியாது என நான் மருத்துவர் ரவிச்சந்திரனிடம் ஆலோசனை செய்தேன். அப்ப நீங்கள் பிரச்சாரம் செல்வது, மக்களை சந்திப்பது இதெல்லாம் கூடாது என மருத்துவர் அறிவுறுத்தினார். 


பயம்:


ஒருவேளை நீங்கள் மக்களை சந்திக்க வேண்டுமென்றால் 10 அடி தள்ளி தான் இருக்க வேண்டும். பிரச்சாரம் செல்ல வேண்டும் என்றால் மாஸ்க் கழற்றவே கூடாது என எச்சரித்தனர். இதெல்லாம் வாய்ப்பே இல்லை என சொன்னேன். இதை வெளியில் சொன்னால் பயந்துட்டாங்கன்னு சொல்வாங்க. அரசியல் முடிவில் ஒருமுறை பின்னாடி சென்றால் நமக்கு இருக்கும் மதிப்பு என்னாகும் என எனக்கு பயம் இருந்தது. 


உடனே டாக்டர், நீங்க சொல்ல வேண்டாம். ஊடகங்கள், ரசிகர்களை கூப்பிடுங்க நான் சொல்றேன். உடல்நலம் பற்றிய உண்மையை தான் சொல்லப் போகிறோம். அதன்பிறகு தான் நான் அரசியலுக்கு வரவில்லை என தைரியமாக சொன்னேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 


ரஜினியின் அரசியல் பயணம் 


கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் வருகை குறித்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதியிலேயும் போட்டியிடுவோம் என சொன்னார். அதன்பின்னர் ட்விட்டல் பல சமூக நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்தார். 


அதன்பின்னர் 2020 ஆம் அண்டு ரஜினியின் உடல்நிலை குறித்தும், அரசியல் வருகை குறித்தும் போலியான அறிக்கை வெளியானது. ஆனால் இதில் குறிப்பிட்டப்பட்ட உடல்நிலை குறித்த தகவல் உண்மையானது என ரஜினி தெரிவித்தார். அதன்பின்னர் ஜனவரியில் கட்சியில் தொடக்கம்..டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 


ஆனால் நடுவில் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து டிசம்பர் 29 ஆம் தேதி கட்சி தொடங்கவில்லை  என குறிப்பிட்டு 3 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தேர்தல் பிரசாரத்தின்போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும்தான் தெரியும் என கூறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.