Padayappa Re-Release: ரஜினி படம் வேண்டாம் என ஒதுங்கிய ஐஸ்வர்யா ராய்.. உள்ளே வந்த ரம்யா கிருஷ்ணன்!
படையப்பா படத்துக்கு நடிகர், நடிகைகள் தேர்வு செய்யலாம் என முடிவு செய்தோம். நீலாம்பரி கேரக்டர் யோசிக்கும்போதெல்லாம் எனக்கு ஐஸ்வர்யா ராய் தான் நினைவுக்கு வரும்.

படையப்பா படத்தின் நீலாம்பரி கேரக்டருக்கு முதலில் நாங்கள் ஐஸ்வர்யா ராயை தான் அணுகினோம் என நடிகர் ரஜினிகாந்த் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
1999ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் தயாரித்து நடித்த படம் “படையப்பா”. இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கினார். இந்த படத்தில் சிவாஜி கணேசன், லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், அப்பாஸ், சௌந்தர்யா, ப்ரீதா விஜயகுமார், ராதாரவி, செந்தில், நாசர் என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் இப்போது வரை ரசிகர்களின் பேவரைட் படமாக உள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு படையப்பா படம் அவரின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளது.
இந்த நிலையில் இப்படம் பற்றிய பழைய நினைவுகளை ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். அதில், “படையப்பா படத்துக்கு நடிகர், நடிகைகள் தேர்வு செய்யலாம் என முடிவு செய்தோம். நீலாம்பரி கேரக்டர் யோசிக்கும்போதெல்லாம் எனக்கு ஐஸ்வர்யா ராய் தான் நினைவுக்கு வரும். அவங்க தான் செய்யணும் என முடிவு செய்தேன். கிட்டதட்ட 4 மாசம் அவர் பின்னால் அலைந்தோம். அப்போது ஐஸ்வர்யா ராய் ரொம்ப பிசியா இருந்தாங்க. சினிமா தொடர்பு மூலமா அவரை பிடிக்க நினைத்தோம். பின் அவரின் உறவினர்கள் மூலமாக முயற்சித்தோம். அவங்க முடியும், முடியாதுன்னு கூட சொல்லல. ஒருவேளை கதை நல்லாருக்கு நான் பண்றேன்னு சொல்லியிருந்தா, நிச்சயம் 2 ஆண்டுகள் வரை வெயிட் பண்ண கூட தயாரா இருந்தோம். காரணம் அந்த நீலாம்பரி கேரக்டர் கிளிக் ஆனால் தான் படம் ஹிட், இல்லையென்றால் வாய்ப்பே இல்லை.
அதன்பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு இஷ்டம் இல்லை என தெரிந்தது. அதன்பிறகு ஸ்ரீதேவி, மீனா, மாதுரி தீக்ஷித் என பலரையும் சொன்னார்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் கண்ணில் திமிரு, ஆணவம் எதுவும் கிடையாது. சரி என்ன பண்ணலாம் என யோசிக்கும்போது கே.எஸ்.ரவிகுமார் ரம்யா கிருஷ்ணன் பெயரை சொன்னார். அவங்களா என யோசித்தேன். நான் படிக்காதவன் படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் நடித்திருக்கிறேன். அவர் தெலுங்கில் நிறைய படம் பண்ணியிருக்கிறார். ஆனால் பார்த்தது இல்லை. கே.எஸ்.ரவிகுமார் தான் ரம்யாவின் கண் அவ்வளவு பவரா இருக்குது. கொஞ்சம் அவர் எடை கூடும் வரை வெயிட் பண்ண வேண்டும் என சொன்னார்.
படத்தில் பரதநாட்டியம் ஆட வேண்டும் என கேட்டால் அவர் ஏற்கனவே அரங்கேற்றம் செய்திருக்கிறார் என போட்டோவை அனுப்பினார். எனக்கு அப்பவும் பெரிய ஈர்ப்பு இல்லை. கொஞ்சம் வெயிட் போடுவாங்க. அப்புறம் பாத்துட்டு சொல்லுங்க என கே.எஸ்.ரவிகுமார் சொன்னார். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் செய்யுங்க என சொல்லி விட்டேன். பின்னர் அந்த கேரக்டருக்குரிய போட்டோ ஷூட் செய்து காட்ட ஓகேவானது” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.





















