முதலமைச்சர் பதவி பற்றி நடிகர் ரஜினிகாந்த படம் ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மாநிலத்தை ஆளுகின்ற முதலமைச்சர் பதவி என்பது முள் கிரீடம் போன்றது. ஆனால் அந்த இடத்துக்கு போட்டி என்பது பலமுனை சார்ந்து காலம் காலமாக நடந்து வருகிறது. என்றாவது ஒருநாள் அந்த பதவியில் உட்கார்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் விடா முயற்சியாக அரசியல் கட்சி தலைவர்கள் முயன்று வருகின்றனர். அதற்கு சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய் மட்டும் விதிவிலக்கா என்ன? 


விஜய்யின் அரசியல் 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை நோக்கி இருந்தாலும் அவரின் வருகைக்கு ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் அரசியல்,சினிமா என இரண்டு துறையிலும் இருக்கவே செய்கிறார்கள்.






 


இப்படியான நிலையில் ரஜினியின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதில், “முதலமைச்சர் என்றால் அவ்வளவு சீப்பா போயிடுச்சா. நினைச்சவனெல்லாம் முதலமைச்சர். யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகிடலாமா? - எப்பேர்ப்பட்ட பதவி, எவ்வளவு பெரிய பொறுப்பு. ஒரு வேலைக்காரனை வைத்துக் கொண்டு 4 பேர் இருக்கும் குடும்பத்தை சமாளிக்கவே திண்டாடுறீங்க. நாடுங்கிறது எவ்வளவு பெரிய வீடு. எத்தனை ஆட்கள், பிரச்சினைகள். அதையெல்லாம் தீர்க்க வேண்டும் என்றால் எவ்வளவு அறிவு வேணும், அனுபவம் வேணும், தியாகம் வேணும். நேர்மை வேணும். எளிமை வேணும். ஒரு தகப்பன் நல்லா இருந்தா தான் குடும்பம் நல்லா இருக்கும். அதே மாதிரி தான் ஒரு தலைவன், சிஎம் நல்லா இருந்தா தான் இந்த நாடு நல்லாருக்கும்” என்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளது. 


சம்பந்தப்பட்ட இந்த வீடியோ ரஜினி நடித்த “பாபா” படத்தில் இடம்பெற்றது. 2002 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார், ஆஷிஷ் வித்யார்த்தி, ரியாஷ் கான், சுஜாதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாபா படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ரஜினியே சொந்தமாக இப்படத்தை தயாரித்திருந்தார். ரஜினி என்றைக்கும் தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்வதை நோக்கமாக கொண்டிருந்தார் என்பதை விளக்கும் வண்ணம் இப்பட்ம எடுக்கப்பட்டிருந்தது. ரிலீசான சமயத்தில் படுதோல்வியடைந்த பாபா படம் ரி-ரிலீஸில் இன்றைய இளம் தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.