நடிகர் ரஜினிகாந்த் தியேட்டருக்கு படம் பார்க்க சென்று விட்டு தலைதெறிக்க ஓடிய சம்பவத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டது பற்றி நாம் காணலாம். 


1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ரஜினி. கிட்டதட்ட 48 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வரும் அவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். 73 வயதானாலும் தான் என்றும் பாக்ஸ் ஆபீஸ் ரூலர் தான் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். ரஜினி நடிப்பில் கடைசியாக இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியானது. இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.


தொடர்ந்து அவர் சிறப்பு வேடத்தில் நடித்த லால் சலாம் படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனையடுத்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் “வேட்டையன்” படத்தில் ரஜினி நடிக்கிறார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 171வது  படத்திலும் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படியான நிலையில் ரஜினி பேசிய பழைய வீடியோக்கள், நேர்காணல்கள் போன்றவை சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கம். 


அப்படி ஒரு நேர்காணலில் தான் தியேட்டர் ஒன்றில் இருந்து தலைதெறிக்க ஓடிய சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, அந்த நேர்காணலில் மாறுவேடங்களில் நீங்கள் வெளியே போகிறீர்களாமே, அதில் என்ன மறக்க முடியாத சம்பவம் இருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, "ஒருமுறை பெங்களூருவில் 3 தியேட்டர்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் ஒன்றில் படம் பார்க்க சென்றிருந்தேன். மாறுவேடத்தில் சென்ற நான் படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே  வந்து கொண்டிருக்கிறேன்.


அந்த ஏரியாவுல தியேட்டருக்கு வந்த ரசிகர்களால் பயங்கரமான ட்ராஃபிக் ஜாம் இருக்குது. நான் மாறுவேடம் போட்டு அந்த கூட்டத்தின் நடுவில் சென்று கொண்டிருக்கிறேன். அப்போது யாரோ பின்னாடி இருந்து தலைவா என கத்தி கொண்டிருந்தார். எனக்கு உடலெல்லாம் வெடவெடத்து விட்டது. என்னோட கார் வேற எங்கேயோ பார்க் பண்ணி இருக்கேன். மாறுவேஷம் போட்டாலும் நம்மளை சரியா பார்த்துட்டானோ என்ற குழக்கத்தில் திரும்பி பார்க்கலாமா  வேண்டாமா என உள்ளுக்குள் எனக்கு கேள்விகள் எழுகிறது.


அந்நேரம் சட்டென அங்கு வந்த ஒரு ஆட்டோவில் ஏறி அந்த பகுதியில் இருந்து நழுவினேன். ஆனால் தலைவா என்ற குரல் மறுபடியும் கேட்கவில்லை. அப்போதுதான் அந்த நபர் யாரோ ஒருவரை அழைத்தார் என தெரிய வந்தது. அந்த சம்பவம் என்னால் மறக்க முடியாது” என ரஜினி தெரிவித்திருப்பார்.