தன்னைப் பற்றி மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தவறாக நினைத்து கொண்டிருந்தது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிப்பில் சிவாஜி கணேசனை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. அவர் மறைந்தாலும் இன்றைக்கும் அவரது நடிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்பதே நிதர்சனம். எதையும் முகத்துக்கு நேராக பேசும் அவரின் பண்பு அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அப்படி ஒரு நிகழ்வு பற்றி நடிகர் ரஜினிகாந்த பேசியுள்ளார். 


சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் தான் ஹீரோவாக நடித்தார். 2004 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் (800 நாட்கள்) ஓடிய படம் என்ற சாதனையை இன்றளவும் தக்க வைத்துள்ளது. இப்படியான நிலையில் இந்த படத்தின் 200வது நாள் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த் சிவாஜி கணேசன் பற்றி பல விஷயங்களை தெரிவித்திருந்தார். 


ரஜினியின் பேச்சு 


 படையப்பா படத்துக்கு நான் தான் தயாரிப்பாளர். வேலையே இல்லைன்னாலும் நான் ஷூட்டிங் ஸ்பாட்ல இருப்பேன். சிவாஜி அப்பா வர்றதுக்கு முன்னாடி நாங்க எல்லாரும் அங்க இருப்போம், அவர் யார்கிட்டேயும் அவ்வளவு சீக்கிரமா பேச மாட்டாரு. ஆனால் என்னை கூப்பிட்டு அவர் பேசுனாரு. 


20 நாட்கள் மைசூர்ல ஷூட்டிங் நடந்துச்சு. அதுல 10 நாட்கள் என்னை கூப்பிட்டு வச்சு அரசியல், குடும்பம், சமூகம் பற்றி பேசினார். என்னிடம் சில விஷயங்களை யாரிடமும் சொல்லக்கூடாது என சொன்னார். ஒருமுறை என்னிடம், நான் செத்துப் போயிட்டா என் உடலுடன் வருவியாடா என சிவாஜி அப்பா கேட்டார். ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க என கேட்டேன். அதற்கு வயசாகிட்டே போகுதுல. நீ ஊர்லேயே இருக்க மாட்ட, அதனாலே கேட்டேன் என சொன்னார். நான் கண்டிப்பா வருவேன் என சொல்லி கடைசி வரை அவர் உடல் தகனம் நடக்கும் வரை இருந்தேன். எங்க அப்பாவுக்கு கூட அப்படி பண்ணது இல்ல.


அதேபோல் சிவாஜி அப்பா என்னை பற்றி தவறாக நினைத்து கொண்டிருந்ததாக தெரிவித்தார். நல்லா மார்க்கெட் இருக்க நேரத்துல வருஷத்துக்கு ஒரு படம் , 2 வருஷத்துக்கு ஒரு படம் நடிக்கிறான். ஊர் ஊரா சுத்துறான்னு நினைச்சேன். உனக்கு சொல்றவங்க யாரும் இல்லையா என நினைச்சேன்டா. எல்லார்கிட்டேயும் சொன்னேன். அப்புறம் தான் நான் உணர்ந்தேன். எனக்கு வேலை செய்ய மட்டும் தான் தெரியும். வேலை இல்லைன்னா என்ன பண்ணனும்ன்னு தெரியாது. ஆனால் நீ வேலை செய்யாம இருக்குறது எப்படின்னு தெரிஞ்சி வச்சிருக்க. அதனால யார் என்ன சொன்னாலும் நீ செஞ்சது தான் கரெக்டு என சொன்னார் என்று ரஜினி தெரிவித்திருந்தார்.