வாழ்க்கையில் இளமையாக இருக்க இந்த 4 விஷயங்களை தவிர்த்தால் போதும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவிக்கும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

Continues below advertisement

தவிர்க்க வேண்டிய 4 உணவுகள்

அது குசேலன் பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி என சொல்லப்படுகிறது. அதில் பேசும் ரஜினிகாந்த், “இந்த வயதில் என்னுடைய புகைப்படங்களை எல்லாம் பார்த்து விட்டு ரஜினிகாந்த் ரொம்ப இளமையாக இருக்கிறார். எப்படி அது என கேட்கிறார்கள். அது ஆண்டவனின் அருள் என்பதில் மறுப்பேதும் இல்லை. ஆனால் அவர் இளமையாக இருக்க என்ன செய்கிறார், என்ன சாப்பிடுகிறார், இமயமலையில் வேர் எதையாவது சாப்பிடுகிறாரா என கேட்கிறார்கள்.

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஒரே ஒரு விஷயம் தான். வாழ்க்கையில் 4 வெள்ளை உணவுகளை நாம் தள்ளி வைத்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம். அதாவது உப்பு, சர்க்கரை, மாத்திரை, அரிசி சாதம் ஆகிய நான்கும் தான். அதேபோல் பால், நெய், தயிர் ஆகியவையும் தவிர்க்க வேண்டும். 

Continues below advertisement

பாசிட்டிவ் எண்ணம்

இதெல்லாம் 40 வயதுக்கு மேலே முயற்சி செய்யுங்கள். தயவுசெய்து 15,20 வயதுகளில் முயற்சிக்காதீர்கள். டயட் எல்லாம் இளம் வயதினர் மேற்கொண்டால் மன அழுத்தம் உருவாகி விடும். சாப்பாட்டில் எல்லாம் குறை வைக்காதீர்கள், ஜீரணிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் 40,50 வயதுக்கு மேல் அந்த 4 வெள்ளை உணவுகளை தவிருங்கள். அப்படி இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

அதேசமயம் இஞ்ஜினுக்கு (மூளை) ஆயுள் போட வேண்டும். அதற்கு பாசிட்டிவ் எண்ணங்களை நினைக்க வேண்டும். அதாவது, “நல்லா இருக்கேன், நல்ல இருக்கப் போறேன்.. எனக்கும், என்னை சார்ந்தோருக்கும் நல்லதே நடக்கும்” என நினைக்க வேண்டும்” என ரஜினிகாந்த் பேசுகிறார். 

ரஜினிகாந்தின் சுறுசுறுப்பு

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தனது 75 வயதிலும் இன்றளவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட அவர், உடற்பயிற்சி விஷயத்திலும் மிக ஆர்வம் காட்டி வருகிறார். உடல் நல பிரச்னைகள் இருந்தபோதிலும் முடிந்தளவும் மருந்து, மாத்திரைகளை குறைத்து ஆரோக்கியத்தை பேணுகிறார். அவரின் பல மேடை பேச்சுகள் எதிர்கால சந்ததியினர் நோய் நொடியில்லாமல் வாழ்வதற்கான அறிவுரைகளாக இருக்கும். 

இப்படியான நிலையில் ரஜினிகாந்த், அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2026ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் நிலையில் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்துடன் அவர் ஒரு படம் இணைகிறார். இப்படம் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் விலகியதால் வேறு இயக்குநரை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.