அரசியல் தொடர்பான செய்திகள் எல்லாம் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். 


நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா, தன்யா பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலரும் லால் சலாம் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 


லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இந்த கேரக்டரில் அவர் நடித்துள்ளது மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது. அதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.


இந்த படத்தை தொடர்ந்து அனைவரது பார்வையும் ரஜினியின் அடுத்தப்படமான வேட்டையன் படத்தின் மீது திரும்பியுள்ளது. ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இப்படத்தை இயக்கும் நிலையில் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


இந்தப் படத்தில் துஷாரா விஜயன், ஃபகத் ஃபாசில் , அமிதாப் பச்சன், டானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள்  நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்தடுத்து ரஜினி படங்கள் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


இதனிடையே இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “லால் சலாம் படம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்குன்னு கேள்விப்பட்டேன். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதனால் லைகா நிறுவனம், இயக்குநர் ஐஸ்வர்யா மற்றும் படக்குழுவினருக்கு எனது பாராட்டிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 


என்னுடைய அடுத்தப்படமான வேட்டையன் படத்தின் ஷூட்டிங் 80 சதவிகிதம் முடிந்து விட்டது. இன்னும் 20 சதவிகித படப்பிடிப்பு மட்டுமே உள்ளது. அது முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்தார். அப்போது ரஜினியிடம், ‘நடிகர் விஜய்யை தொடர்ந்து விஷாலும் அரசியலுக்கு வருவதாக சொல்லியுள்ளார். நடிகர்கள் எல்லாருமே அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்கள். முதல்வர் பதவி என்பது அவ்வளவு எளிதானதா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘சாரி.. அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்க வேண்டாம்’ என ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.