16 Years of Sivaji: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி - தி பாஸ் படம் வெளியாகி இன்றோடு 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
2000 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படங்களில் நடிப்பதை முற்றிலும் குறைத்து வந்தார். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் என்ற முறையில் அவர் நடித்து வந்தார். அதன்படி 2000 ஆண்டிற்கு பின்னால் அவர் நடிப்பில் பாபா, சந்திரமுகி படங்கள் வெளியாகி இருந்தது. இதில் சந்திரமுகி யாரும் எதிர்பாராத வகையில் அதிரி புதிரி ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த சிவாஜி படம் வெளியானது.
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா நடித்திருந்தார். மேலும் சுமன்,விவேக், மணிவண்ணன். வடிவுக்கரசி, போஸ் வெங்கட், சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா, ரகுவரன், உமா பத்மநாபன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
ஸ்டைல் ஐகான் ரஜினி
பொதுவாக தமிழ் சினிமாவின் ஸ்டைல் ஐகான் என நடிகர் ரஜினிகாந்தை சொல்வார்கள். மற்ற நடிகர்கள் ஒரு காட்சியில் உயிரைக் கொடுத்தாவது அந்த உணர்வுகளை நடிப்பில் கொண்டு வர வேண்டும் என மெனக்கெடுவார்கள். ஆனால் ரஜினிக்கு அப்படி ஒரு பிரச்சினையே இல்லை எனலாம். மாறாக அவர் சின்னதாக ஒரு ஸ்டைலை அங்கு நிகழ்த்தி காட்டுவார். அது சிவாஜி படம் முழுக்க நிரம்பி கிடந்தது. இந்தப் படம் முழுக்கவே வசனங்கள் பேசுவதிலும் சரி, ஸ்டைலிஷ் ஆக நடிப்பதிலும் சரி ரஜினி தனது ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
ஷங்கர் படங்களை எடுத்துக் கொண்டால் வித்தியாசமாக காட்சிகளை வைப்பதில் அவர் சிறந்தவர் எனலாம். அந்த வகையில் படத்தின் டைட்டில் கார்டிலேயே மாஸ் காட்டி இருப்பார். அதேபோல் வழக்கமாக ரஜினியின் பெயர் வரும்போது ஒலிக்கும் பின்னணி இசையையும் இந்த படத்தில் மாற்றி இருப்பார். மேலும் பாடல்களில் ஒரு பிரமாண்டத்தையே நிகழ்த்தியிருப்பார்.
பார்த்து பழகிய கதையில் புதிய யுக்தி
அமெரிக்காவில் படித்துவிட்டு தன் சொந்த நாட்டில் மக்களுக்கு அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாட்டுக்கு திரும்புகிறார் ரஜினி. இங்கு அரசியல் மற்றும் ஆள் பலத்துடன் இருக்கும் சுமன் இந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார். ஒரு கட்டத்தில் பெரிய பணக்காரனான ரஜினியை நடுத்தெருவுக்கு கொண்டு வருகிறார். இதிலிருந்து மீண்டு ரஜினி தன் இலட்சியத்தை எப்படி அடைந்தார் என்பதை விறுவிறுப்பாகவும் ரசிகர்கள் ரசிக்கும் படியும் அழகாக திரைக்கதை அமைத்து காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
படத்திற்கு பெரும் பிளஸ் ஆக பாடல்களும், காமெடி காட்சிகளும் அமைந்தது. ஸ்ரேயா உடன் காதல், அவரை திருமணம் செய்ய வீட்டிற்கு சென்று பழகுவது தொடர்பான காட்சிகள், கருப்பாக இருக்கிறார் என சொன்னதால் வெள்ளை நிறமாக மாற முயற்சிப்பது என படம் முழுக்க ஒரு துறுதுறு ரஜினியை நாம் காணலாம். கிளைமேக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆர். என்னும் பெயரில் மொட்டை தலை ரஜினி வருவதெல்லாம் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக அமைந்தது.
3டி தொழில்நுட்பத்தில் சிவாஜி
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மாஸ் காட்டியிருந்தது. குறிப்பாக தீம் மியூசிக் இன்றளவும் பல ரஜினி ரசிகர்களின் ரிங்டோன் ஆகவே உள்ளது. மேலும் ஒரு பாடலுக்கு நயன்தாரா நடனம் ஆடியது, அந்தப் பாடலில் எஸ்பிபி மூச்சு விடாமல் பாடியது, படத்தில் ஸ்டைல் மன்னன் ரஜினிக்காகவே ஸ்டைல் ஸ்டைல் என பாடல் வைத்தது என படம் முழுக்க நம் கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டே இருக்கும்.
‘பேரே கேட்டாலே சும்மா அதிருதில்ல’, சுமன் ரஜினியிடம் யார் நீ என கேட்க, அதற்கு ‘பராசக்தி ஹீரோ’ டா என அவர் சொல்லும் காட்சிகள், ரிச் கெட் ரிச்... புவர் கெட் புவர், ஆபீஸ் ரூம் காட்சிகள், ‘பன்னிங்க தான் கூட்டமா வரும்..சிங்கம் சிங்கிளா தான் வரும்’ என படம் முழுக்க வசனங்கள் பட்டையை கிளப்பியது.
இப்படியான படம் வந்து இன்றோடு 17 ஆண்டுகள் ஆகிவிட்டதை ரசிகர்களால் நம்பவே முடியவில்லை. சிவாஜி படம் சில வருடங்களுக்குப் பிறகு 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. மீண்டும் ஷங்கர் ரஜினி கூட்டணி எந்திரன், 2.0 ஆகிய படங்களில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.