ஜெயிலர் படம் வெளியாகவுள்ளதை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரின் பழைய வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


தமிழ் சினிமாவில் தனது 50 ஆண்டை நெருங்கி கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கிட்டதட்ட 4 தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கோலோச்சி கொண்டிருக்கிறார். அவரின் ஸ்டைல் தான் ரஜினியை அனைவருக்கும் பிடித்துப்போக காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் இதுவரை 168 படங்களில் நடித்துள்ளார். 


அவரின் 169வது படமாக ஜெயிலர் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடர்ந்து 4வது முறையாக ரஜினி படத்தை தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 


இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூலை 28 ஆம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்று ரஜினிகாந்த் பேசிய கருத்துகள் சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. 






பொதுவாகவே ரஜினியின் மேடை பேச்சுகள் ரசிகர்களிடம் கவனம் பெறும். அவரின் கருத்துகள் பெரும்பாலும் பொது அறிவுரையாகவும், தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தின் பாடத்தையும் பற்றியே இருக்கும். இந்த நிலையில் ரஜினியின் பழைய மேடை பேச்சு வீடியோக்கள் இணையத்தில் அவரின் ரசிகர்களால் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 


அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “ஆண்டவனுக்கு யாரையாவது கோபத்தில் தண்டிக்க வேண்டும் என்று நினைத்தால் அவரை ஏழையாக்கிவிட்டு நிறைய பெண் குழந்தைகள் கொடுத்து விடுவார். இதைவிட அதிகமாக கோபம் இருந்தால் பணம், பேர், புகழ் கொடுத்து விட்டு அப்படியே விட்டு விடுவார். இவை அனைத்தையும் விட இன்னும் அதிகமாக கோபமாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை இந்தியாவில் அரசியல்வாதி ஆக்கி விடுவார் என தெரிவிக்கிறார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள், எப்பொழுதும் மனதில் நினைத்ததை வெளிப்படையாக பேசுபவர் தலைவர் ரஜினிகாந்த் மட்டுமே என சிலாகித்து வருகின்றனர்.