நடிகர் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த அண்ணாமலை படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


இயக்குநர் கே.பாலசந்தர் தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் “அண்ணாமலை”. இந்த படத்தில் சரத்பாபு, குஷ்பூ, மனோரமா, ஜனகராஜ், நிழல்கள் ரவி, வினு சக்கரவர்த்தி, கரண் என பலரும் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த இப்படம் ரஜினி ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. ரஜினியின் டைட்டில் பெயருக்கு கொடுக்கப்படும் இசை இப்படத்தில் தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. 


பால்காரனாக நடித்த ரஜினிகாந்த், நண்பன் செய்த துரோகத்துக்கு எதிராக சபதம் எடுத்து வாழ்க்கையில் முன்னேறும்படியான காட்சிகள் இன்றும் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. ஆனால் இப்படம் உருவானதே ஒரு சுவாரஸ்ய பின்னணி தான்.  


ஒரு நேர்காணலில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “அண்ணாமலை படத்தின் ஒரிஜினல் இயக்குநர் நான் இல்லை. படம் ஆரம்பித்து 2 நாட்கள் முன்னால் அந்த இயக்குநர் விலகிக்கொள்ள என்னை கே.பாலசந்தர் இயக்க வேண்டும் என சொன்னார். என்கிட்ட கதை கூட கிடையாது. என்ன நம்பிக்கை என்றே புரியவில்லை. பூஜை மற்றும் ரிலீஸ் தேதியை கே.பாலசந்தர் முடிவு செய்து விட்டார். சரியாக படம் ஆரம்பித்து சொன்ன தேதியில் ரிலீஸ் செய்து விட்டோம். 






படம் ரிலீசாவதற்கு முன்னால் பாலசந்தர் ஃபர்ஸ்ட் காப்பியில் முழு படத்தையும் பார்க்கிறார். குட்லக் தியேட்டரில் பால்கனியில் நின்று கொண்டு என்னை அழைத்தார். நான் என்ன சொல்லப்போகிறார் என ஆர்வமாக இருந்த நிலையில் “உனக்கு அறிவு இருக்கா?” என கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. படம் சூப்பரா வந்திருக்கு. மிகப்பெரிய ஹிட்டாகும் என பாராட்டி கைகொடுத்தார். அது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. 


படம் ரிலீசான அன்று ரஜினி டைட்டிலில் இருந்து ஒவ்வொரு காட்சியும் கொண்டாடியதை பார்த்து கண்களில் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. 4 நாட்கள் கழித்து திருச்சியில் உள்ள தியேட்டருக்கு சென்ற என்னை தூக்கி கொண்டாடினார்கள். ஆனால் ரஜினிக்கு படம் நல்லா வந்துருக்கு என மேக்கிங்கின் போது புரிந்து கொண்டார். ஒருநாள் என்னிடம் எனக்கு பாதிபடம் எடுத்த வரை உன்மேல டவுட் இருந்துச்சுன்னு வெளிப்படையாகவே சொன்னார். 


நண்பன் ஏமாத்திட்டான், வீட்டை கோவிலாக நினைத்த அம்மாவின் வலி என செண்டிமெண்ட் காட்சிகளுக்கான பின்னணி சாமானிய மக்களையும் எளிதாக சென்றடைந்தது” என தெரிவித்தார்.