மாரடைப்பால் காலமான நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமான மயில்சாமி நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது மரனம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் சமூக வலைத்தளங்களில் மயில்சாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மயில்சாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ”மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். 23, 24 வயசுலேயே எனக்கு தெரியும். மிமிக்ரி ஆர்டிஸ்டா இருந்து சினிமாவுக்கு வந்தவர். தீவிர எம்ஜிஆர் ரசிகர் மற்றும் சிவன் பக்தர். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திப்போம். ஆனால் சினிமா பற்றி மட்டும் தான் பேசமாட்டார். நிறைய படங்களில் இருவரும் சேர்ந்து நடிக்கல. அது ஏன்னு புரியல.
ஒவ்வொரு திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு அங்க போயிருவாரு. அங்க இருக்க கூட்டத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு போன் பண்ணுவாரு. கடந்த கார்த்திகை தீபத்துக்கு போன் பண்ணாரு. நான் ஷூட்டிங்கில் இருந்ததால போன் அட்டெண்ட் பண்ணல. அடுத்ததாக அவரை சந்திக்கும் போது மன்னிப்பு கேட்க நினைத்தேன். அதை அப்படியே மறந்து போய்ட்டேன்.
விவேக், மற்றும் மயில்சாமி ஆகிய இரு நகைச்சுவை நடிகர்களின் மரணம் சினிமா துறை மற்றும் சமூகத்திற்கு பேரிழப்பாகும். சிவராத்திரி அன்னைக்கு மயில்சாமி இறந்தது, தீவிர பக்தனை சிவன் அழைத்துக் கொண்டார் எனலாம். இது தற்செயல் அல்ல. ஆண்டவனின் கணக்கு. கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் எனது கையால் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற மயில்சாமியின் கடைசி ஆசையை கேள்விப்பட்டேன். அதனை நான் கண்டிப்பாக நிறைவேத்துவேன்” என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அவசரமாக கிளம்பி வந்த ரஜினி
முன்னதாக நேற்று முன்தினம் பெங்களூரு சென்ற ரஜினி அண்ணன் சத்தியநாராயணனுடன் சென்று பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி மையத்திற்கு வழிபாடு நடத்தினார். பின்னர் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவில் பெங்களூருவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்திய சிவராத்திரி விழாவில் குடும்பத்துடன் பங்கேற்றார்.
தொடர்ந்து நேற்றைய தினம், ரஜினி தனது அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளும் ஒரே நாளில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மயில்சாமியின் மறைவு செய்தி கேட்டு சென்னை திரும்பிய ரஜினி, இன்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.