வேட்டையன்
சீனியர் நடிகராக இருந்து கொண்டு சமகாலத்தில் திரையரங்குகளிலும் ஓடிடி தளங்களிலும் எந்த மாதிரியான படங்கள் வெளியாகின்றன என்பதை எல்லா நடிகர்களும் கவனித்து வருவதில்லை. அந்த வகையில் ஒரு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகிறது என்றால் அதை வெளிப்படையாக பாராட்டும் வழக்கத்தை தொடர்ந்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த ஆண்டு வெளியான கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா , சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் குழுவை அழைத்து அவர்களை நேரில் சந்தித்து பேசினார் ரஜினிகாந்த்.
தற்போது த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் , துஷாரா விஜயன் , ஃபகத் ஃபாசில் , ரானா டகுபதி, ரித்திகா சிங் , மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சமீபத்தில் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரின் படக்குழுவை சந்தித்து பேசியுள்ளார் ரஜினிகாந்த்.
இன்ஸ்பெக்டர் ரிஷி படக்குழுவை சந்தித்த ரஜினிகாந்த்
அமேசான் பிரைமில் வெளியாகி சர்ச்சைக்குரிய விமர்சனங்களைப் பெற்று வரும் வெப் சீரிஸ் ‘ இன்ஸ்பெக்டர் ரிஷி’ . இந்த தொடரில் நவீன் சந்திரா , சுனைனா , மாலினி ஜீவரத்னம் , கண்ணா ரவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த தொடரில் பின்னணி இசை ரசிகரகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இளம் இசையமைப்பாளர் அஸ்வத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜே.எஸ் நந்தினி இந்த தொடரை இயக்கியுள்ளார். கடந்த மார்ச் 29-ஆம் தேதி வெளியாகிய இந்த தொடர் ரசிகர்களிடம் பரவலாக கவனம் பெற்றுள்ளது.
இப்படியான நிலையில் இந்த தொடரின் இயக்குநர் ஜே.எஸ் நந்தினியை வேட்டையன் படத்தின் படக்குழுவில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
படக்குழுவை சந்தித்து பேசிய ரஜினி “ இன்ஸ்பெக்டர் ரிஷி நல்லா போகுதாமே “ என்று கேட்டு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதனைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ஜே.எஸ் நந்தினி.