46 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் தகவலை கடந்த வரம் கமல் உறுதிபடுத்தினார். இன்று விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினியும் இந்த தகவலை உறுதிபடுத்தினார். ஆனால் இந்த படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை என்றும் ரஜினி தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது
46 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ரஜினி கமல்
இந்த ஆண்டு கமல் நடித்த தக் லைஃப் மற்றும் ரஜினியின் கூலி ஆகிய இரு படங்களும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் இரு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தின. இப்படியான நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த தகவலை நடிகர் கமல் ஹாசன் கடந்த வாரம் துபாயில் நடந்த சைமா விருது விழாவில் உறுதிபடுத்தினார். கமல் பேசியபோது " எங்களுக்குள் போட்டி என்பது நீங்கள் ஏற்படுத்திவிட்டது தான். ஆனால் எங்களுக்கு இது பெரிய விஷயம் இல்லை. ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதால் தான் இத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்தோம். நாங்கள் இணைந்து நடிப்பது தொழில் ரீதியாக வேண்டுமானால் பெரிய விஷயமாக இருக்கலாம் ஆனால் எங்களைப் பொறுத்தவரை இப்போதாவது நடக்கிறதே என்று சந்தோஷம் தான். எங்கள் இருவரது படங்களை நாங்களே தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை எப்போதுமே எங்களுக்கு இருந்தது. இப்போதாவது நடக்கட்டும் ." என்று கூறினார்.
கமலுடன் நடிப்பது பற்றி ரஜினி
இன்று விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி , கமலுடன் இணைந்து நடிப்பதை உறுதிபடுத்தினார் " ஜெயிலர் 2 படத்திற்கு பின் நானும் கமலும் நடிக்கிறோம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஆனால் படத்திற்கான கதை மற்றும் இயக்குநரை இன்னும் உறுதி செய்யவில்லை" என ரஜினி கூறியுள்ளார்
ரஜினி கமல் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதை நினைத்து உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கவில்லை என்றால் வேறு எந்த இயக்குநர் இப்படத்தை இயக்குவார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது