நடிகர் பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி படம் பிரமாதமாக உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 


நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், அன்னா பென், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “கல்கி 2898 ஏடி”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்த படம் நேற்று முன்தினம் (ஜூன் 27)  வெளியானது. இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனைப் படைத்துள்ளது. முதல் நாள் மட்டும் உலகளவில் ரூ.191.5 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட வருடங்களாக வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த பிரபாஸூக்கு கல்கி படம் கம்பேக் ஆக அமைந்துள்ளது. 






இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். அவர் தான் இரண்டாம் பாகத்துக்கான அடித்தளமாக உள்ளார். இப்படியிருக்கையில் கல்கி 2898 படம் ஹாலிவுட் தரத்துக்கு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் கல்கி படத்தை பாராட்டி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கல்கி படம் பார்த்தேன். என்ன ஒரு அற்புதமான படம். இயக்குநர் நாக் அஸ்வின் இந்தியன் சினிமாவை வேறு புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், திபீகா படுகோனே மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாம் பாகத்துகாக காத்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.