தமிழ் திரையுலகின் பிரபலமான குணச்சித்திர நடிகர் ராஜேஷ். அவர் இன்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தா டாக்டர்தான் காரணம்:
அவரது மரணம் குறித்து அவரது தம்பி சத்யன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "காலையில் 6 மணிக்கு தூக்க நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியிருந்தால் நாங்கள் அழைத்துச் சென்றிருப்போம். ஒன்னும் ஆகியிருக்காது. சித்தா டாக்டர் என்று ஒருவர் வந்து பேசிக்கொண்டே இருந்தார். அவர் கதையை பேசியே 2 மணி நேரம் இழுத்தடித்து விட்டார். 6, 6.30 மணிக்கு வந்த அந்த டாக்டர் 8 மணி வரை பேசிக்கொண்டே இருந்துவிட்டார்.
அதன்பின்னரே ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தோம். மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அந்த லேட் பண்ணதுதான் பெரிய தப்பாகிவிட்டது. நாங்களும் துரிதப்படுத்தாம இருந்துவி்ட்டோம். நெஞ்சு வலினு அவர் சொல்லவே இ்ல்லை. இரவு முழுவதும் தூக்கம் இல்ல. மூச்சு விட முடியலனு சொன்னாரு. நான் கிளம்பி டாக்டரை கூப்பிட போனேன். பாதி தூரம் போன பிறகு அண்ணன் பையன் ஒன்னுமில்லனு சொல்லி வரச்சொல்லிட்டான். நானும் வந்துட்டேன். அதுதான் பெரிய தப்பாகிவிட்டது.
இதய அறுவை சிகிச்சை:
டாக்டரை அழைத்து வந்திருந்தால் அவர் இதன் தீவிரத்தை சொல்லிருப்பாரு. உடனே ஆம்புலன்ஸ் வச்சு பெரிய இடத்துக்கு அழைத்துப் போயிருந்துருக்கலாம். இதய அறுவை சிகிச்சை செய்திருப்பதால் இரண்டு வருஷமா சிகிச்சையிலதான் இருந்தாரு. அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செஞ்சுகிட்டு இருந்தாரு. 10 நாள் துபாய் போய்விட்டு வந்தாரு. நேற்று முன்தினம் இரவுதான் துபாயில் இருந்து வந்தாரு. நேற்று கூட உடல்சுகம் இல்லை என்று அவரே படுத்துட்டாரு. " இவ்வாறு அவர் பேசினார்.
முதலமைச்சர் நேரில் அஞ்சலி:
அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெளிநாட்டில் உள்ள அவரது உறவினர்கள் சென்னை வரவும் உடல் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அவள் ஒரு தொடர்கதை படம் மூலமாக நடிகராக அறிமுகமான ராஜேஷ் சினிமாவில் 30 ஆண்டுகளாக நடித்து வந்தார். சிவாஜி முதல் விஜய் சேதுபதி வரை பலருடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படத்திலும் நடித்துள்ளார். டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.
நடிகர் ராஜேஷ் நடிகராக மட்டுமின்றி தொழிலதிபராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தவர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்ட ராஜேஷிற்கஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது சகோதரர் மஸ்கட்டில் வசித்து வருகிறார். மகள் கனடாவில் வசித்து வருகிறார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். எம்.ஜி.ஆர், ஜானகியுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர் நடிகர் ராஜேஷ்.