விழுப்புரத்தில் ரசிகர்களுடன் போட்டோ ஷூட் நடத்திய நடிகர் ராகவா லான்ரஸ், தன்னை பார்க்க வந்த ரசிகர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தானே நேரில் சென்று ரசிகர்களை சந்திக்க உள்ளதாக நடிகர் ராகவா லான்ரஸ் தெரிவித்தார்.


ரசிகர்களுடன் போட்டோ ஷூட் நடத்திய நடிகர் ராகவா லான்ரஸ்


விழுப்புரத்தில் நடிகர் ராகவா லான்ரஸ் நற்பணி மன்றம் சார்பில் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நடிகர் ராகவா லான்ரஸூக்கு பறை மேளம் இசைத்து நடனமாடியும், மலர்களை தூவியும் கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து விழா மேடை ஏறிய நடிகர் ராகவா லான்ரஸ், ஒவ்வொரு ரசிகரையும் அழைத்து தன்னுடன் நிற்க வைத்து தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது கூடியிருந்த தனது ரசிகர்களிடையே நடிகர் ராகவா லான்ரஸ் பேசினார்.


அப்போது அவர் பேசுகையில்:-


கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை சந்திப்பதற்காக சென்னைக்கு வரும் வழியில் ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது எனக்கு மிகப் பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு தான் என் ரசிகர்கள் யாரும் என்னை சந்திக்க வர கூடாது என்றும் நான் தான் ரசிகர்களை பார்க்க செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்தேன். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நானே நேரில் சென்று ரசிகர்களை சந்திக்க முடிவு செய்து அதில் முதல் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்துள்ளேன். இனி ஒவ்வொரு மாவட்டமாக நானே நேரில் சென்று ரசிகர்களை சந்திப்பேன் என்றார்.