நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது படங்களுக்கு தான் தேர்வு செய்த டைட்டிலை சொல்பவர்களுக்கு பரிசு வழங்கி வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன் எழுதி இயக்கி, நடித்து தயாரித்த படம் இரவின் நிழல். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி வெளியான இப்படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இரவின் நிழல் படம் தான் உலகிலேயே முதல் “நான்லீனியர் சிங்கிள் ஷாட்” படம் என்ற அடையாளத்துடன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
ஆனால் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இது உலகின் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் இல்லை என்ற கருத்தை முன்வைக்க, பார்த்திபனுக்கும் இவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. ஆனாலும் இரவின் நிழல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பார்த்திபனுக்கே தெரியாமல் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
இதனிடையே 100க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற இரவின் நிழல் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலிலும் இடம் பெற்று அசத்தியுள்ளது. இதனிடையே நேற்றை தினம் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தகத்தின் பக்கம் ஒன்றை வெளியிட்டு அதில் மயிலிறகு ஒன்றையும் இருந்தவாறு பதிவிட்டார். மேலும் அந்த பதிவில் ஒரு புடவையோட அழகு அதோட தலைப்புல தெரியும்.அந்த மாதிரி இந்த டிசைனுக்குள்ள இருக்க திரைப்படத்தோட தலைப்பைக் கண்டுபிடிங்க பாக்கலாம்! என தெரிவித்திருந்தார்.
பலரும் மயில் இறகு.. புத்தகத்தில் ஒளிந்திருக்கும் மயிலிறகே... மயிலே..வண்ணங்களாய் வாழ்கிறாள் என பல தலைப்புகளை பதிவிட்டனர்.
இந்நிலையில் மீண்டும் ட்வீட் ஒன்றை பதிவிட்ட பார்த்திபன், என் தலைப்பை யூகித்த ஒவ்வொருவருக்கும்,அழகான தலைப்பை கொண்ட புடவை ஒன்று பொங்கல் பரிசாக வழங்கப்படும்! “புடவையை வாங்கி நாங்க என்ன கட்டிக்கவா முடியும்” என கடுப்படிக்கும் ஆண்மாக்களுக்கு… கட்டிகிட்டவங்களுக்கு குடுங்க இல்ல கட்டிக்கப் போறவங்களுக்கு குடுங்க! என தெரிவித்திருந்தார். அதன்பிறகு நேற்றைய தினம் தனது புதுப்படத்திற்கு ”52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு” என பெயரிட்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையில் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள பார்த்திபன், இவ்வாண்டில் … இன்னொரு படம் துவங்குகிறேன்… அத்தலைப்பு ஒரு பெண்ணின் பெயர் கொண்டதாய் இருக்கும்.ஆனால் அதனுள் ஒரு ஆண் பெயர் இருக்கும். கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு doll பரிசு! அனேகமாக அதிகமானவர்கள் கண்டுபிடிப்பீர்கள். எனவே ஒரு பொம்மை மட்டும் பரிசு. Ready 1..2..3 என தெரிவித்துள்ளார்.