என் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் நான் வாழ்க்கைப்பட்டிருப்பது தமிழுக்கு தான் என இயக்குநரும், நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற பவன் கல்யாண் நடித்த உஸ்தாத் பகத் சிங் பட விழாவில் பேசிய பார்த்திபன் தன்னுடைய சாதியைப் பற்றி பெருமையாகவும், வெளிப்படையாகவும் பேசியது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்த நிலையில் அவர் 2 நிமிட ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நண்பர்களே வணக்கம். இது விடியலா? மணி இரவு 1.12 ஆகிறது. எங்கும் இருள் மூட்டம். விடியக்கூட பொறுமையின்றி இவ்விளக்கக் கடிதத்தை அளிக்கிறேன். என்றாவது இது முடிவுக்கு வரட்டும் என வறட்டு ஈகோவில் காத்திராமல் அறிந்ததை சொல்கிறேன். அதையும் மீறி என் பேச்சு யார் மனதையும் உண்மையாக கீறி காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தோய்ந்த மன்னிப்பை கேட்கிறேன். பிரச்சனை தோய்ந்த இப்பொழுதை நற்பொழுதாகக் வேண்டிக் கொள்கிறேன்.
ஏனோ தெரியவில்லை. சில விஷயங்கள் எந்த லாபமும் இல்லாமல் புது நிம்மதிக்கு பங்கம் விளைவித்து விடுகின்றது. நான் எவ்வளவு தான் தமிழோடு பற்று கொண்டிருந்தாலும் என் பிறப்பு சான்றிதழை மாற்ற முடியாது தானே?. எப்படி மாற்ற முடியும்?. ஏன் மாற்ற வேண்டும்?. பிறப்பு என் பொறுப்பு அல்ல. விருப்ப மனு போட்டு இந்த பெற்றோருக்கு இப்பெயரில் இந்த வீட்டில் இப்படித்தான் பிறக்க வேண்டும் என்பதை எந்த குழந்தையும் கேட்டு பெறுவதில்லை. வளரும் சூழ்நிலையில் தானாக தன் வாழ்க்கையை அது தேர்ந்தெடுத்து கொள்கிறது. அப்படி நான் வாழ்க்கைப்பட்டிருப்பது தமிழுக்கு. சோறும் சுகம் யாவும் தமிழே தந்தது. போகும் வரை சொர்க்கம் தமிழே. இதை என்றும் எங்கும் உலகெங்கும் பெருமையாக சொல்வேன்.
என் தாய் மொழி தெலுங்கு தான் என்பதை இங்கு மட்டுமல்ல எங்கும் எப்போதும் சொல்வேன். உஸ்தாத் பகத் சிங் பட நிகழ்ச்சி மேடையில் மிகுந்த டென்ஷன் இருந்தது. காரணம் எனக்கு சரியாக தெலுங்கு பேச வராது. அந்த மொழியில் நான் திணறி பேசுவது தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வார்த்தைகளை கவனமாக களமிறக்க முடியாமல் பேசி விட்டு இறங்கினேன். உஸ்தாத் பட டப்பிங்கில் தெலுங்கு பேச தெரியாததால் ரிஜெக்ட் செய்யப்பட்டேன். தமிழ் டப்பிங்கில் நான் தான் பேசுவேன். வருத்தத்தை உயர்த்த வேண்டாம் என நல்லெண்ணத்தில் இதை எழுதி விட தொடங்கினேன். எப்படி முடிக்க வேண்டும் என தெரியவில்லை. எனவே இதை ஆரம்பித்தவர்களே முடித்து வைத்து விடுங்கள். தமிழ் உயர்ந்ததும், உன்னதமானது மட்டுமல்ல. அன்பும் கருணையும் நிறைந்தது" என தெரிவித்துள்ளார்.
