ஒரு சிறப்புக் குழந்தையின் பெற்றோராக இருப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. பல அவமானங்கள், ஏளனங்கள், கண்டனங்களை சந்திக்க வேண்டியிருக்கும். சிறப்புக் குழந்தைகளுக்கு இந்த சமூகம் வைத்திருக்கும் ஒரே பெயர் பைத்தியம். மிக எளிதாக இந்தச் சமூகம் அந்தக் குழந்தைகளைப் பார்த்து லூசு, பைத்தியம் என்று முத்திரை குத்திவிடுவார்கள். அப்படி தான் சந்தித்த இன்னல்களையும், காலப்போக்கில் இப்போது சிறப்புக் குழந்தைகள் மீதான பார்வை எவ்வாறு மாறியிருக்கிறது என்று நெகிழ்ச்சி பொங்க பகிர்ந்துள்ளார் நடிகர் பிருத்விராஜ் என்ற பப்லு.


யார் இந்த பிருத்விராஜ்?
தமிழ்த் திரையுலகின் நடிகர்களில் ஒருவராக பிரித்திவிராஜ் திகழ்ந்து வருகிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் சினிமா உலகில் நுழைந்து 47 இவர் மேல் ஆகிறது. இதுவரை இவர் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் சின்னத்திரை சீரியல்களில் வில்லனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கண்ணான கண்ணே தொடரில் கதாநாயகிக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


ரியல் வாழ்க்கையில் இவர் தன் குழந்தையை கண்ணான கண்ணே என்று பார்த்துக் கொள்ளும் தந்தை தான். இவருக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறார். அவர் பெயர் அகத். அவருக்கு ஆட்டிஸம் குறைபாடு இருக்கிறது. ஆட்டிஸம் பாதித்த குழந்தை பிறந்துவிட்டதே என்று ஆரம்பத்தில் பதறிப்போன நொறுங்கிப் போன தம்பதி பின்னர் நிலைமையை உணர்ந்து வாழ்க்கை தந்த சவாலை மனமுவந்து ஏற்றனர். இப்போது தங்கள் குழந்தையை அந்த சவாலுடன் வாழும் அளவுக்கு வளர்த்து சமூகத்துடன் ஓரளவு ஒத்து வாழப் பழக்கியுள்ளனர்.


ஆட்டிஸம் என்றால் என்ன?
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் இரண்டாம் தேதி ‘உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நாள்’ கடைபிடிக்கப்படுகிறது. உங்கள் குழந்தை உங்களது கண்களைப் பார்த்து பேசவில்லையா?  யாரிடமும் பழகாமல் தனியாக விளையாடுகிறதா? உங்கள் குழந்தையிடம் ஏதேனும் வித்தியாசமான உடல்மொழி தென்படுகிறதா? இது ஆட்டிஸம் பாதிப்பாகக் கூட இருக்கலாம். ஆம், இந்தியாவில் அனேகக் குடும்பங்களில் இன்றைக்கு ஆட்டிசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறோம். ஆட்டிஸம் (Autism) என்பது மதியிறுக்கம். அதாவது, இயல்பில் இருந்து விலகிய நிலை. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், இவர்கள்  சமூகத்துடன் ஒட்டி வாழ்வதற்கான குணங்களிலும், பழக்க வழக்கங்களிலும் பாதிப்பு உடையவர்களாக இருப்பார்கள். இதை நோய் என்பதை விட இதனை குறைபாடு என்றே கூற வேண்டும். இப்போதெல்லாம் இது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.


ஈட்டியால் குத்தினார்கள்..
தனது ஆட்டிஸம் குழந்தையுடன் விமானநிலையத்திற்குச் சென்றபோது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பிருத்விராஜ் பகிர்ந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் அது. அப்போது நானும் எனது மனைவியும் மகனும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வர விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் என் மகனை நிப்பாட்டி கையை தூக்கச் சொன்னார். ஆனால் என் மகன் அதை சரியாகச் செய்யவில்லை. உடனே அவர் என்னிடம் இவன் என்ன பைத்தியமா என்றார். அந்த வார்த்தை எங்கள் நெஞ்சில் ஈட்டிபோல் பாய்ந்தது. நாங்கள் எவ்வளவு சொல்லியும் அந்த நபர் புரிந்து கொள்ளவில்லை. சட்டம் பேசினார். அப்புறம் நான் சண்டையிட்டேன். சட்டத்தில் ஆட்டிஸம் உள்ளிட்ட மனநல பாதிப்புகள் உள்ளவர்களுடன் பெற்றோர், பாதுகாவலர், மருத்துவர் வந்தால் அவர்கள் விமானப் பயணத்திற்கு அனுமதிக்கப்படலாம் என்று வாதாடினேன். அது ஊடக கவனம் பெற்றது. எனக்கு சிஎன்என் செய்தி நிறுவனம் இண்டியன் ஆஃப் தி இயர் விருது கொடுத்தது.


இப்போது அண்மையில் என் மகனை அழைத்துக் கொண்டு பாஸ்போர்ட் அலுவலகம் சென்றேன். அவரது பாஸ்போர்ட் ரினீவலுக்காகச் சென்றிருந்தோம். அங்கிருந்த அனைவருக்குமே என் மகனைப் பார்த்ததும் அவருக்கு ஏதோ பிரச்சினை இருப்பது தெரிந்தது. இருந்தும் அவர்கள் யாரும் அதனை குறையாக நினைக்கவில்லை. என் மகனைப் பார்த்தபோது யாரும் அனுதாபப்படவில்லை. அதேபோல் கேலி கிண்டலும் செய்யவில்லை. சாதாரண நபரை எப்படி அணுகுவார்களோ அதே போல் அணுகினர். என் மகன் புகைப்படம் எடுக்கும்போது சற்றே பொறுமையிழக்கும் வகையில் செயல்பட்ட போதும் கூட யாரும் முகம் சுழிக்கவில்லை. சமூகப் பார்வை மாறியிருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார்.