நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவான “ஸ்டார்” படம் இன்றோடு 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


இரண்டாவது முறையாக இணைந்த கூட்டணி 


ரட்சகன் படத்தை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்த், தனது 2வது படமான “ஜோடி” படத்தில் நடிகர் பிரஷாந்துடன் இணைந்தார். இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் மீண்டும் இந்த கூட்டணி “ஸ்டார்” படத்தில் இணைந்தது. இப்படத்தில் ஹீரோயினாக ஜோதிகா நடித்திருந்தார். மேலும் , ரகுவரன் , விஜயகுமார், ஸ்ரீவித்யா, பிரவீன்காந்த், மணிவண்ணன், ரமேஷ் கண்ணா,சின்னி ஜெயந்த் என பலரும் இப்படத்தில் நடித்தனர். இந்த படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில், சபேஷ் முரளி பின்னணி இசையமைத்தார். 


படத்தின் கதை 


மற்றவர்களின் தவறுகளுக்கு பழி ஏற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது வாழ்க்கையை வாழ்வார் பிரஷாந்த். இதனிடையே முன்னாள் கலெக்டராக வரும் விஜயகுமாரின் மகனை (பிரவீன் காந்த்) ரகுவரன் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். இதனால் மகனை மொரிஷீயஸிற்கு அனுப்பி யாருக்கும் தெரியாமல் வளர்க்கிறார். தனது மகனாக நடிக்க பிரஷாந்தை அணுக அவரும் சம்மதிக்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே இப்படத்தின் கதையாக அமைகப்பட்டிருந்தது. 


இசையமைக்க மறுத்த ஏ.ஆர்.ரஹ்மான் 


இப்படத்திற்கு இசையமைக்க இயக்குநர் பிரவீன் காந்த் ஏ.ஆர்.ரஹ்மானை அணுகிய நிலையில், அப்போது இருந்த பிஸியான ஷெட்யூல் காரணமாக அவர் இசையமைக்க மறுத்துவிட்டார். மேலும் தான் இசையமைத்த இந்தி படங்களான   தக்ஷக் மற்றும் பூமியில் இடம்பெற்ற பாடல்களின் ட்யூனை உபயோகிக்க அனுமதியளித்தார். மெட்டுகளுக்கு ஏற்ப பாடல்களை வைரமுத்து, பழனிபாரதி, பிறைசூடன் எழுதினர். பாடல்கள் இன்றைக்கும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆகவே உள்ளது. பின்னணி இசையை சபேஷ்-முரளி அமைத்தனர். 


கூடுதல் தகவல்கள் 


முதலில் இந்த படத்திற்கு ஹீரோயினாக சிம்ரன் தேர்வான நிலையில், பின்னர் அவர் விலகினார். தொடர்ந்து அஜித் - நக்மா கூட்டணியில் படம் தொடங்கிய நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நக்மா, அஜித் விலக, படம் கைவிடப்பட்டது. பின்னர், பிரசாந்த் மற்றும் ஜோதிகா கெமிஸ்ட்ரியில் படம் உருவானது. அதேசமயம் இப்படத்தில் பிரவீன் காந்த் நடிப்பதாக முடிவானதும் பிரஷாந்த் தரப்பு அதிருப்தியடைந்ததாக சொல்லப்பட்டது. மேலும் ஸ்டார் படத்திற்காக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள குறிஞ்சி கிராமத்திற்கு படப்பிடிப்பிற்கு சென்ற குழுவினர் அங்கு இருபது வருடங்களாக மூடப்பட்டிருந்த கோவிலை புதுப்பிக்க ரூ.2 லட்சத்தை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.