கோர்ட் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த்

டாப்ஸ்டார் பிரசாந்த் நல்ல கதைகளை தேர்வு செய்து மறுபடியும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்க முயன்று வருகிறார். அந்த வகையில் பிரசாந்த் நடித்த அந்தகன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. விஜயின் தி கோட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்த கோர்ட் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர்  ஃபைவ் ஸ்டார் கதிரேசனின் மகன் கார்த்தி இந்த படத்தில் நாயகனாக நடிக்க நடிகை தேவயானியின் மகள் இனியா இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

நடிகர் நானியின் வாஸ் போஸ்டர் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் வெளியான படம் கோர்ட் : ஸ்டேட் vs நோபடி. தன் வீட்டு பெண்ணை காதலிக்கும் பையன் மீது பொய் போக்ஸோ வழக்கு போட்டு அவனை சிறையில் அடைக்கிறார். இதைத் தெரிந்துகொள்ளும் உதவி வழக்கறிஞர் ஒருவர் அந்த வழக்கை எடுத்து வாதாடுகிறார். விறுவிறுப்பான கோர்ட் ரூம் டிராமாவாக உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. திரையரங்கத்தைத் தொடர்ந்து ஓடிடியிலும் இந்த படத்திற்கு பலதரப்பட்ட ரசிகர்களிடம் பாராட்டுக்கள் கிடைத்தது. தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் வழக்கறிஞராக நடிக்க இருக்கிறார்.