கன்னட நடிகர் கிச்சா சுதீப் அரசியல் பிரவேசம் செய்ய உள்ளார் என்ற தகவல் சில நாட்களாகவே சலசலப்பில் இருந்த ஒன்றுதான். அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் பா.ஜ.க வில் இணைய உள்ளார் என்றும் அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் இணைந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இணையத்தில் வைரலாக  பரவிய தகவலை அடுத்து நடிகருக்கு 'அந்தரங்க வீடியோவை' வெளியிடுவோம் என வந்த மிரட்டல் செய்தி வந்தது. அதனால் சுதீப் ரசிகர்கள் பலரும் ட்விட்டர் மூலம்  அரசியலில் இறங்க வேண்டாம் என கோரிக்கை வைத்தனர்.


முடிவில் நடிகர் கிச்சா சுதீப், முதல்வருக்கு ஆதரவாக "நான் வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன் ஆனால் நான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை" என தெரிவித்து இருந்தார். 



வேதனையில் பிரகாஷ்ராஜ் : 


நடிகர் கிச்சா சுதீப் எடுத்துள்ள இந்த முடிவு தனக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். பா.ஜ.க கட்சிக்கு எதிராக மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். அந்த வகையில் நடிகர் கிச்சா சுதீப் பா.ஜ.க வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக விடுத்துள்ள அறிக்கைக்கு சோஷியல் மீடியா மூலம் பதிவிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தோல்வியை தழுவும் ஆதரவில்லாத பா.ஜ.க வெளியிட்ட போலியான ஒரு செய்தியாக கிச்சா சுதீப் குறித்த செய்தி இருக்கும் என நம்பினேன். ஆனால் தனது உறுதியான நிலைப்பாட்டை சுதீப் தெரிவித்தது எனக்கு வேதனையை அளிக்கிறது என்றுள்ளார். 


சுதீப் அறிக்கையால் பலரும் தங்களின் கருத்தை இணையத்தில் பதிவிட்டுட்டு வருகிறார்கள். ஒரு சினிமா நட்சத்திரம் தனது ஆதரவை எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் கர்நாடகாவில் பா.ஜ.கவின் தலைவிதியை மக்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். உறுதியான ஆதரவு என்பதை காட்டிலும் நட்பு ரீதியாக வழங்கப்படும் ஆதரவு என்பதால் முடிவு மக்கள் கையில் தான் உள்ளது. இப்படி பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.