கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்து வருவதை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி:
பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார். மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இது அவரின் தனிப்பட்ட பயணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்த அவர், கடற்கரையில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு, அதன் கட்டட கலையை கண்டு ரசித்தார். தொடர்ந்து படகு மூலம் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றார்.
விவேகானந்தர் பாறையில் தியானம்:
அங்கு சுற்றி பார்த்து விட்டு தியான மண்டபத்தில் தியானம் செய்தார். நாளை மதியம் 3 மணி வரை விவேகானந்தர் பாறையில் இருக்கும் தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்ளும் அவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. தேர்தல் விதிமீறலில் பிரதமர் மோடி ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றது. இப்படியான நிலையில் இன்று காலை காவி உடையில் சூரிய நமஸ்காரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மீண்டும் தியானத்துக்கு சென்று விட்டார்.
அவரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று சுற்றுலா பயணிகளுக்கும் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செல்போன்கள், உடமைகள் அனுமதிக்கப்படாத நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த கன்னியாகுமரி பயணத்தை நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.
மெடிடேஷனா? மீடியா அடென்ஸனா?
அவர் தனது எக்ஸ் வலைத்தள பதிவில், “நௌதாங்கி.. மெடிடேஷனா? அல்லது மீடியா அடென்ஸனா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இதில் நௌதாங்கி என்பது வட இந்தியாவில் மிகவும் பிரபலமான நாட்டுப்புற இசை நாடகமாக இருந்தது. பாலிவுட் சினிமா வருவதற்கு முன்பு, வட இந்தியாவின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் நௌதாங்கி மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.