தமிழ் திரையுலகில் கோமாளி படம் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படம் தந்த வெற்றிக்கு பிறகு இவர் லவ் டுடே என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அந்த படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படம் தந்த மாபெரும் வெற்றி பிரதீப் ரங்கநாதனை ஒரு நடிகராக மாற்றியது. 

டூட் ஆக மாறிய பிரதீப் ரங்கநாதன்:

லவ் டுடே படத்திற்கு முழு நேர நடிகராக மாறிய பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டூட் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்க உள்ளார். இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியிலும் உருவாக உள்ளது. 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைக்க உள்ளார்.  இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமைதா பாஜு நடிக்கிறார். ஹிருது ரோகண், ரோகிணி, பரிதாபங்கள் புகழ் டிராவிட் ஆகியோர் நடிக்கின்றனர். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். 

சூர்யாவுடன் மோதும் பிரதீப் ரங்கநாதன்

தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்கேஜி என்ற படத்திலும் நடித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் நடித்து வெளியான டிராகன் படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. 

பிரதீப் ரங்கநாதன் தற்போது முழுநேரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் தீபாவளி வெளியீடு என்பது மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 45வது படமும் வரும் தீபாவளியில் வெளியாக உள்ளது. இதனால், சூர்யா படத்துடன் முதன்முறையாக பிரதீப் ரங்கநாதன் படம் மோத உள்ளது.