நடிகர்கள் பிரபுதேவா, சரத்குமார் நடிப்பில் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்ற ‘பெண்ணின் மனதை தொட்டு’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


1999 ஆம் ஆண்டு விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எழில். அப்படத்தின் வெற்றி கோலிவுட்டில் கவனிக்கத்தக்க இயக்குநராக மாறினார். எழிலின் இரண்டாவது படமாக ‘பெண்ணின் மனதை தொட்டு’ படம் வெளியானது. இந்த படத்தில் சரத்குமார், பிரபுதேவா, ஜெயா சீல், விவேக், தாமு என பலரும் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 


படத்தின் கதை 


இந்தியாவின் முன்னணி இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான பிரபுதேவா இருக்கும் மருத்துவமனையில், ஜெயாசீல் இதய பிரச்சனை உள்ள ஒரு குழந்தையுடன் வருகிறார். அங்கு மருத்துவராக பிரபுதேவா இருப்பதை பார்த்து டென்ஷனாகிறார். பிளாஷ்பேக் காட்சிகள் செல்லும். பிரபுதேவா அண்ணனாக சரத்குமார் வருவார். அவர் ஒரு ரவுடி. தன்னுடைய தம்பியும் அப்படியாகி விட கூடாது என டாக்டருக்கு படிக்க வைக்கிறார். 


பிரபுதேவாவும் ஜெயாசீலும் காதலிப்பதை அறிந்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். இதனிடையெ குடும்ப விழாவுக்கு செல்லும் ஹீரோயினை அவரது அக்கா கணவர் கட்டாய கல்யாணம் செய்ய நினைக்கிறார். பிரபுதேவாவுக்கு தகவல் தெரிவித்தும் அவர் தடுக்க வராமல் போக, ஜெயாசீல் அக்கா திருமணத்தை நிறுத்த தற்கொலை செய்கிறார். பிரபுதேவா வராததன் காரணம் என்ன என்பது படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. 


ரசிக்க வைத்த பாடல்கள் 


இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் இன்றளவும் அனைவரின் பேவரைட் ஆக ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா’ பாடல் உள்ளது. படத்திற்கு பெரும் பலமான விவேக்கின் காமெடி காட்சிகள் அமைந்தது. அரசியல்வாதி மகனாக மருத்துவம் படிப்பது, அரசியலில் களம் காண்பது, பேராசியருக்கு நடுஇரவில் போன் செய்து லாடு லபக்குதாஸா என கேட்பது, பெவிகால் ஒட்டிய சேரில் உட்கார்ந்து பின்னால் வாங்கிக்கட்டி கொண்டு கஷ்டப்படுவது என தனி ராஜ்ஜியமே நடத்தியிருப்பார். 


இன்றும் பலருக்கும் இந்த படத்தின் பெயர் தெரியாது. ஆனால் கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா பாடலை சொன்னால் எளிதாக அடையாளம் காண்பார்கள் என்பதே நிதர்சனம்.