பிரபாஸ் நடித்துள்ள தி ராஜா சாப் படம் உங்களை ஏமாற்றி விட்டால் என்னை தேடி வந்து விமர்சிக்கலாம் என அப்படத்தின் இயக்குநர் மாருதி தெரிவித்துள்ளார்.
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் “தி ராஜா சாப்”. பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் IVY என்டர்டெயின்மென்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,சஞ்சய் தத், ஜரினா வாஹேப், சப்தகிரி மற்றும் ரித்தி குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். தி ராஜா சாப் படம் 2026ம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி மகர சங்கராந்தி வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ஒருவழியாக ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டு முன்னோட்ட பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தெலங்கானாவின் ஹைதரபாத் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் புறநகர் பகுதியான குகட்பள்ளியில் தி ராஜா சாப் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபாஸ், இயக்குநர் மாருதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாருதி, கண்ணீர் விட்டு அழுத சம்பவம் கூடியிருந்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அவரை நடிகர் பிரபாஸ் தேற்றி ஆறுதல் தெரிவித்தார்.
அதாவது, “இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் பிரபாஸின் படமான தி ராஜா சாப் நிச்சயம் அவரின் ரசிகர்களையும், எதிர்ப்பாளர்களையும் மகிழ்விக்கும் என இயக்குநர் மாருதி நம்பிக்கை தெரிவித்தார். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். அப்படி படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சதவீத ஏமாற்றம் அளித்தாலும் எனது வீட்டிற்கு வந்து விமர்சிக்கலாம். பிரபாஸை நேசிக்கும் யாராவது எங்களை ஏமாற்றிவிட்டதாக உணர்ந்தால் கோண்டாபூர் பகுதியில் உள்ள வில்லா எண் 16ல் உள்ள கொல்லா லக்ஸரிக்கு வரலாம் என மாருதி கூறினார்.
தனது உரையின் நடுவில் கண்ணீர் விட்டு அழுத அவர், கல்லறைக்குச் செல்லும்போது கூட நான் வழக்கமாக அழுவதில்லை என்றும், இந்த கண்ணீர் இயற்கையானது எனவும் கூறினார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக நான் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டேன். இந்த படம் ரிலீசாகும் என ட்ரோல் செய்யப்பட்டேன்.
என்னை நம்பி இவ்வளவு பெரிய படத்தை தயாரித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு 'ஆதிபுருஷ்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் மும்பை சென்று பிரபாஸை சந்தித்தேன். அப்போது அவர் ராமரின் வேடத்தில் இருந்தார். அந்த ராமர் இந்த ஆஞ்சநேயருக்கு (மாருதி) ஒரு படம் நடிக்க வாய்ப்பு அளித்தார் எனவும் இயக்குநர் நினைவு கூர்ந்தார்.