பொங்கல் பண்டிகை என்றாலே தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி தமிழ் திரையுலகிற்கும் விசேஷம் ஆகும். தொடர் விடுமுறை என்பதால் வசூலில் கல்லா கட்ட பல திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இந்த பொங்கல் பண்டிகை நாளில் பெரிய  நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளியாகி வருகிறது. 

Continues below advertisement

பொங்கல் போட்டியில் ராஜாசாப்:

அந்த வகையில், தமிழில் 2026ம் ஆண்டு பொங்கல் போட்டியில் விஜய்யின் ஜனநாயகன் - சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்கள் வெளியாகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதேசமயம், புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயனின் பராசக்தி மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த இரு படங்கள் மீதான எதிர்பார்ப்பும், இரு படங்களுக்கும் இடையேயான போட்டியே குறையாத நிலையில், இந்த படங்களுக்கு போட்டியாக களத்தில் குதித்திருப்பது ராஜா சாப். தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படமும் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. 

Continues below advertisement

பெரும் எதிர்பார்ப்பு:

தமிழ்நாட்டிற்கு பொங்கல் பண்டிகை போல, தெலுங்கு மக்களுக்கு சங்கராந்தி பண்டிகையாகும். இதனால், அந்த நன்னாளை முன்னிட்டு இந்த படம் தெலுங்கில் வெளியாகிறது. பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகராக மாறிவிட்டார். அதனால், பிரபாஸ் அதன்பின்பு நடித்த அனைத்து படங்கள் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. 

கடைசியாக அவர் நடித்த கல்கி படமும் தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், ராஜாசாப் படமும் பான் இந்தியா படமாக வெளியாகிறது. இந்த படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடத்திலும் வெளியாகிறது.

ஜனநாயகன், பராசக்திக்கு போட்டி:

தமிழ்நாட்டிலும் பிரபாஸிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், ராஜாசாப் படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பேய் படமாக நகைச்சுவை கலந்த திகில் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இதனால், குடும்ப ரசிகர்களை இந்த படம் கவர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

பிரபல இயக்குனர் மாருதி இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரபாஸ் மட்டுமின்றி சஞ்சய் தத், போமன் ஈரானி, மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். 

தமிழ்நாட்டில் வெல்லப்போவது ஜனநாயகனா? பராசக்தியா? என்ற போட்டி உருவாகியுள்ள நிலையில், இந்த இரண்டு படங்களுக்கும் சவால் விடும் வகையில் ராஜாசாப் களமிறங்குகிறது. பராசக்தி படம் வரும் ஜனவரி 10ம் தேதியும், ஜனநாயகன் படம் வரும் ஜனவரி 9ம் தேதியும் ரிலீசாகிறது.