`ராதே ஷ்யாம்’ திரைப்படம் பல மொழிகளில் வெளியாகியிருந்த போதும் தெலுங்கு மொழியைத் தவிர பிற மொழிகளில் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதோடு `ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் வசூலும் பெரிதாக இல்லை. `பாகுபலி’ திரைப்படம் வெளியான பிறகு, இந்தியா முழுவதும் `பான் இந்தியன்’ திரைப்படங்கள் என அழைக்கப்படும் பல மொழித் திரைப்படங்களுக்கான சந்தை உருவாகியிருக்கிறது. மேலும், அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் தெலுங்கு மொழியின் முன்னணி நடிகர்களின் நடிப்பில், தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு, பிற மொழிகளுக்கு டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. சமீபத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான `புஷ்பா’ திரைப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் நல்ல வசூலைப் பெற்றிருந்தது. 



நாடு முழுவதும் பான் இந்தியத் திரைப்படங்களுக்கான சந்தை பெருகியுள்ள இந்த சூழலில், பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு, பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய `ராதே ஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் உருவாக்கிய இந்தத் திரைப்படத்தில் `பீஸ்ட்’ கதாநாயகி பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியானது. 






பெரும் வசூலை எதிர்பார்த்த படக்குழுவினர் பட வெளியீட்டுக்குப் பிறகு அதிருப்தி அடைந்துள்ளனர். தெலுங்கு மொழியைத் தவிர பிற மொழிகளில் எதிர்பார்ப்புகள் கூடவில்லை என்பதால் இவ்வாறு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு மொழியில் நல்ல வசூலைப் பெற்ற `ராதே ஷ்யாம்’ திரைப்படம், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் முதலான மொழிகளில் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. 



படக்குழுவினர் தரப்பில் இருந்து வெளியான தகவல்களின்படி, இந்தத் திரைப்படத்தின் தோல்வியை ஈடுகட்டுவதற்காக படத்தின் கதாநாயகன் நடிகர் பிரபாஸ் தன்னுடைய சம்பளத் தொகையான 100 கோடி ரூபாய் பணத்தில் இருந்து 50 கோடி ரூபாய் பணத்தை திரும்பக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் பிரபாஸ் இவ்வாறு செய்தது அவரது ரசிகர்களையும், பல்வேறு பிரபலங்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.